கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள், இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.
இது குறித்து ஸ்டாலின் எழுதிய மடலில், ‘ஒரு வார காலம் கடந்த பிறகும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. இயல்பு நிலை திரும்பிட இன்னும் காலம் ஆகும் எனத்தெரிகிறது.
புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவில்லை என்றும், அரசு அதிகாரிகள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்றும் மக்கள் அவலக்குரல் எழுப்பும்போது, அதனை அப்படியே எதிரொலிக்க வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை. அதைத்தான் தி.மு.கழகம் செய்கிறது.
அந்தக் கடமையுடன், நிவாரணப் பணிகளை வழங்கும் முக்கியக் கடமையையும் தொடர்ந்து மேற்கொள்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
புயலால் பெருஞ்சேதம் என்ற செய்தி கிடைத்த மறுநாளே, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்த்து மக்களின் நிலையை அவர்கள் வாயாலேயே சொல்லக் கேட்டறிந்தேன். ஆனால், ஹெலிகாப்டரில் மட்டுமே வலம் வந்த முதலமைச்சரோ, எதிர்க்கட்சித் தலைவர் 3 இடங்களைத்தான் பார்த்தார் என்றும், தான் ஹெலிகாப்டர் மூலம் எத்தனை மரங்கள் சாய்ந்தது என்பதைத் துல்லியமாகப் பார்த்ததாகவும் தன்மனமறிந்து உண்மைக்கு மாறானதைக் கூறியிருக்கிறார்.
புயலின் கொடூரத்திலிருந்து ஒரு வாரகாலமாகியும் விடுபடாமல் தவிக்கும் மக்களைக் காப்பாற்ற இனியாவது அரசு நிர்வாகம் விரைந்து செயல்படவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டை பல வகையிலும் வஞ்சித்து வரும் மத்திய அரசு, இம்முறையாவது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படாமல், தாய்மை உணர்வு கொண்டு நிவாரண நிதியினை தாராளமாக வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.