This Article is From Dec 27, 2019

“M.K.Stalin-ஐ நாடு கடத்த வேண்டும்!”- இந்து மக்கள் கட்சி போடும் புதிய குண்டு!!

"மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் சிஏஏ சட்ட எதிர்ப்பை உள்நோக்கத்துடன் அணுகுகிறது திமுக"

Advertisement
தமிழ்நாடு Written by

"மு.க.ஸ்டாலினின் குடியுரிமை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். அவர் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட வேண்டும்"

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துத் தமிழகத்தில் அரசியல் களமாடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நாடு கடத்த வேண்டும் என்ற புதிய கோரிக்கையை வலியுறுத்தியுள்ளது இந்து மக்கள் கட்சி. அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவர் சோமு.ராஜசேகரன் இந்தக் கருத்தை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசியுள்ளார். 

சென்னையில் இன்று செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசும்போது, “குடியுரிமை திருத்தச் சட்டம் என்று சொல்லப்படும் சிஏஏ-வுக்கு ஆதரவாக நாடு முழுவதும் ஆதரவு அலை இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கிறது திமுக. மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் சிஏஏ சட்ட எதிர்ப்பை உள்நோக்கத்துடன் அணுகுகிறது திமுக. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, மு.க.ஸ்டாலினின் குடியுரிமை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். அவர் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட வேண்டும்,” என்று பேசினார். 

தொடர்ந்து அவர் மாணவர் போராட்டங்கள் பற்றி பேசுகையில், “இன்று மாணவர்கள் தன்னெழுத்தியாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுவதாக ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. நாங்கள் பல மாணவர்களிடம் சிஏஏ பற்றி கேட்டபோது, ‘எங்கள் முஸ்லிம் நண்பர்களை பாகிஸ்தான் போகச் சொல்கிறார்கள். அதனால்தான் போராடுகிறோம்' என்கிறார்கள். சிலரோ, ‘எங்கள் நண்பர்கள் அழைத்தார்கள், வந்தோம்' என்கிறார்கள். அவ்வளவுதான் மாணவர்கள் போராட்டம். அவர்கள் மத்தியில் பொய் பிரசாரம் செய்யப்பட்டு தூண்டிவிடப்பட்டுள்ளார்கள்,” என்றார்.

அதைத் தொடர்ந்து ப.சிதம்பரம் பற்றி பேசுகையில், “அவர் ஏற்கெனவே வழக்கு விசாரணையில் இருப்பவர். ஜாமீனில் வெளியே வந்தவர். அவரை எந்தவித செய்தியாளர்கள் சந்திப்பிலும், எந்தவித போராட்டங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று நீதிமன்றம் தெளிவாக சொல்லியிருக்கிறது. இருந்தும் அவர் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தொடர்ந்து நடந்து வருகிறார். தேச நலனுக்காக கொண்டு வரப்பட்ட ஒரு சட்டத்தை எதிர்த்துப் போராடும் அனைவரும் தேச விரோதிகளே. ஆன்டி இந்தியன்ஸே,” என்று கொதிப்பாக பேசி முடித்தார். 

Advertisement
Advertisement