This Article is From Aug 07, 2019

“கலைஞர் என்பதும் நான்கெழுத்து, ஸ்டாலின் என்பதும் நான்கெழுத்து!”- சிலை திறப்பு விழாவில் எழுச்சியுரை

"வயது மூப்படைந்து வீட்டில் ஓய்வெடுத்தபோது கலைஞரிடம் நாங்கள், ‘முரசொலி அலுவலகம் போகலாமா… அண்ணா அறிவாலயம் போகலாமா…’ என்று கேட்டால்..."

“கலைஞர் என்பதும் நான்கெழுத்து, ஸ்டாலின் என்பதும் நான்கெழுத்து!”- சிலை திறப்பு விழாவில் எழுச்சியுரை

"கழகத்தை வழி நடத்தும் தலைவர் என்பது நான்கெழுத்து. தலைவரின் தலைவராம் கலைஞர் என்பது நான்கெழுத்து"- மு.க.ஸ்டாலின்

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, திமுக (DMK) சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அந்தவகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் சென்னையில் இன்று காலை அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை சென்னை, கோடம்பாக்கத்தில் இருக்கும் முரசொலி அலுவலகத்தில், கருணாநிதியின் திருவுருவச் சிலைத் திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கலைஞரின் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் இறுதியாக சிறப்புரை ஆற்றினார் ஸ்டாலின்.

உரையாற்றியபோது ஸ்டாலின், “அண்ணா இறந்தபோது பெரியார், ‘நடக்கக் கூடாது நடந்தவிட்டது. இழக்கக் கூடாதவரை இழந்துவிட்டோம்' என்று கூறினார். அப்படித்தான் கலைஞர் மறைந்தபோது நமக்குத் தோன்றியது. 50 ஆண்டுகளுக்கு மேல் நம் உணர்வாக, உயிராக இருந்தவர் கலைஞர். இந்திய ஆட்சிச் சக்கரத்தை நகர்த்திக் காட்டியவர் கலைஞர். 14 வயதில் தமிழ்க் கொடியைப் பிடித்த கலைஞர், 94 வயது வரை அதைப் பற்றி நின்றார். 

வயது மூப்படைந்து வீட்டில் ஓய்வெடுத்தபோது கலைஞரிடம் நாங்கள், ‘முரசொலி அலுவலகம் போகலாமா… அண்ணா அறிவாலயம் போகலாமா…' என்று கேட்டால், அவரது கண்கள் விரிவடையும். பேனாவையும் தாளையும் அவரிடத்தில் கொடுத்தால், அண்ணா என்றே எழுதுவார். பேசச் சொன்னால், அண்ணா என்றே உச்சரித்தார். அண்ணா என்றே அவரது முச்சுக் காற்று எழுந்தது. முரசொலி என்று அவரது காதில் கேட்டது. இந்தியாவில் எந்த இயக்கத்துக்கும் இப்படியொரு தலைவர் இல்லை என்பதை பெருமையோடு சொல்ல முடியும். 

பல இடங்களில் கலைஞருக்கு சிலைத் திறக்கப்பட்டுள்ளது. அவரது மூத்தப் பிள்ளையான முரசொலியிலும் இன்று சிலை திறக்கப்பட்டிருக்கிறது. மற்ற இடங்களில் எழுந்து நின்று கர்ஜித்துக் கொண்டிருப்பார் கலைஞர். ஆனால், இங்கு உட்கார்ந்து எழுதிக் கொண்டிருப்பார். அதுதான் அவருக்கு மிகவும் பிடித்த பணி. 

பெரியார், சுயமரியாதையும் பகுத்தறிவுவையும் சொல்லிச் சென்றவர். அண்ணா, மொழி உணர்வையும் இன உணர்வையும் ஊட்டியவர். கலைஞர் மாநில சுயாட்சிக்காகவும் சமூக நீதிக்காகவும் நின்றவர். அவரின் சிலை, நமக்கு அந்தச் செய்தியைத்தான் சொல்கிறது. முன் எப்போதையும்விட கலைஞரின் தேவை இப்போது அதிகமாக இருக்கிறது. 

ஒரே தேர்வு, ஒரே மொழி, ஒரே கொள்கை, ஒரே கட்சி என்று மத்திய அரசு, அதிகாரத்தை மத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால்தான் கலைஞர் சொன்னார், ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்றார். 

நாடாளுமன்றத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் செயல்பட்டு வருவதை கலைஞர் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். மாநில உரிமைகளுக்காக அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். 

இன்று எல்லாவற்றுக்கும் மேலாக காஷ்மீர் பிரச்னை எழுந்துள்ளது. நமது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்க வேண்டிய ஃபரூக் அப்துல்லா, காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படக் கூடாது என்பதுதான் திமுக-வின் நிலைப்பாடு. இந்தக் கருத்துக்காக பலர் நமக்கு தேசபக்திப் பாடம் எடுக்கிறார்கள். இந்தியாவுக்கு சீனாவிடமிருந்தும் பாகிஸ்தானிடமிருந்தும் பிரச்னை எழுந்தபோது, நாட்டின் பக்கம்தானே நின்றோம். அப்படிப்பட்ட எங்களுக்கு பாஜக, தேசபக்திப் பாடம் எடுக்கிறது. தேசபக்தியின் பெயரால் மதவாதத்தைத் தூண்டினால், பாஜக-வை உறுதியாக எதிர்ப்போம். 

கழகத்தை வழி நடத்தும் தலைவர் என்பது நான்கெழுத்து. தலைவரின் தலைவராம் கலைஞர் என்பது நான்கெழுத்து. அந்தக் கலைஞரின் கேடயமாக விளங்கக் கூடிய முரசொலி நான்கெழுத்து. முரசொலியில் சிலையெழுப்பிய ஸ்டாலின் என்பதும் நான்கெழுத்து. எனது உயிர் மூச்சாம் கழகம் என்பதும் நான்கெழுத்து. கழகத்தின் அடித்தளமாக விளங்குகிற தொண்டர் என்பதும் நான்கெழுத்து. அந்தத் தொண்டர்களின் தலைமைத் தொண்டனாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசி முடித்தார். 
 

.