Chennai: திமுக-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் மகனும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவருமான மு.க.அழகிரிக்கும் மீண்டும் பனிப் போர் தொடங்கியுள்ள நிலையில், ‘சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன். கழகத்திற்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன்’ என்று கருத்து தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
சில நாட்களுக்கு முன்னர் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திய அழகிரி, ‘என் அப்பாவிடம் என்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளேன். அது குறித்து மக்கள் பின்னர் அறிவர். கட்சி தொடர்பாகவே என்னுடைய ஆதங்கம் இருக்கிறது. உண்மையான திமுக விஸ்வாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம்தான் உள்ளனர்’ என்று கருத்து தெரிவித்தார்.
இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலைநில் நேற்று அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், ‘தலைவர் கலைஞர் நம்மை விட்டுச் சென்றுள்ள நிலையில், அவர் வழங்கிய ஆற்றலைக் கொண்டு, கழகத்தைக் கட்டிக்காக்கும் பொறுப்பை துணிந்து ஏற்றுள்ளேன். அவரது அன்பு உடன்பிறப்புகள் என்றென்றும் பக்கபலமாக இருப்பார்கள் என்கிற அசையாத நம்பிக்கைதான் இந்தத் துணிவுக்குக் காரணம். வெட்டி வா என்றால் கட்டி வரக் கூடியவர்கள் என் உடன்பிறப்புகள் எனத் தலைவர் கலைஞர் அவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிடுவார். அத்தகைய உடன்பிறப்புகளின் பெருந்துணை உள்ளவரை எனக்கு கவலையில்லை.
நாம் நிறைவேற்றி முடிக்க வேண்டிய சவாலான பணிகள் நிறைய இருக்கின்றன. கழக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் சிகரமாக உயர்ந்திருந்த தமிழ்நாட்டை படுகுழியில் தள்ளியிருக்கிறார்கள் மாநில ஆட்சியாளர்கள். மதவெறியை விதைத்து - மாநில உரிமைகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள். தலைவரை இழந்த கழகத்தில் என்ன நடக்கிறது என்பதில் நம்மை விட ‘அக்கறை’ காட்டுகிறார்கள் அரசியல் எதிரிகள். ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கலாமா என நப்பாசை கொண்டிருக்கிறார்கள்.
நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன். சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன். கழகத்திற்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன், கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் துணையோடு!’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் மோதல் ஆரம்பித்துள்ளது கவனத்துக்குரியதாகியுள்ளது.