தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து குன்னூரில் இன்று பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, கருணாநிதி நன்றாக இருந்தால், தான் தலைவராக முடியாது என எண்ணி அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் 2 ஆண்டுகள் வீட்டிலையே சிறைவைத்தவர் ஸ்டாலின்.
கலைஞருக்கு ஏன் பேசமுடியாமல் போனது? கலைஞரை வெளிநாட்டிற்கு அழைத்துச்சென்றால் அவர் குணமாகி இருப்பார் என்பதை அவரது கட்சி காரர்களே கூறுகின்றனர். முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில், வீட்டு சிறையில் கருணாநிதி வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும். அவருக்கு சில கொடுமைகள் நடந்துள்ளதாக தகவல்கள் வருகிறது, இதனை விசாரிக்க வேண்டியது அரசின் கடமை.
கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் பொய் பேசுகிறார். கொடநாடு கொலை சம்பவம் தொடர்பாக இனி ஸ்டாலின் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நீலகிரி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எதுவும் செய்யவில்லை. நீலகிரி மாவட்டத்தை முன்னிலைப்படுத்த பல திட்டங்களை வகுத்தவர் ஜெயலலிதா என்று அவர் கூறினார்.