டெல்லியில் பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்தித்த ஜோதிராதித்ய சிந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்
ஹைலைட்ஸ்
- சொகுசு விடுதியில் பாஜக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்!!
- கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி
- 21 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
Bhopal: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்திய கட்சியில் இருந்து விலகியதை தொடர்ந்து, அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. இதைதொடர்ந்து, குதிரை பேரத்தை தவிர்க்க காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் தங்களது எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர்.
பாஜகவினர் தங்கள் எம்எல்ஏக்களை குர்கானில் உள்ள ஐடிசி கிராண்ட் பாரத் நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்துள்ளனர். காங்கிரஸ் தரப்பினர் தங்களது ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு எம்எல்ஏக்களை அழைத்துச்செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தி சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 116 எம்எல்ஏக்கள் தேவையென்ற நிலையில், 4 எம்எல்ஏக்களை மட்டுமே காங்கிரஸ் அரசு கூடுதலாக வைத்திருந்தது. இந்தநிலையில், எம்எல்ஏக்களின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால், காங்கிரஸூக்கு பெரும்பான்மை இருக்காது. இதனிடையே, ஜோதிராதித்ய சிந்திய இந்த வாரத்தில் பாஜகவில் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜோதிராதித்ய சிந்தியாவின் ராஜினாமாவை தொடர்ந்து, 21 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபாநாயகருக்கு ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. முன்னதாக 25 எம்எல்ஏக்கள் பதவி விலக தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. இந்த ராஜினாமாக்களை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் 15 மாதங்களே ஆன கம்நாத் அரசு பெரும்பான்மை இழந்து ஆட்சியை இழக்கும்.
இதனிடையே, நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த கமல்நாத், தனது ஆட்சி முழுமையாக 5 வருடம் நடைபெறும் என்று உறுதியாக கூறிய அவர், எதைபற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. நாங்கள் நிச்சயம் எங்களது பெரும்பான்மையை நிரூபிப்போம் என்று அவர் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி திக்விஜய சிங்கிடம், கட்சியில் ஜோதிராதித்ய சிந்தியாவின் செல்வாக்கு குறைந்ததன் காரணமாகவே அவர் பாஜகவுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதனை திட்டவட்டமாக மறுத்த திக்விஜய சிங், சிந்தியா ஓரங்கட்டப்பட்டதாக கேள்வி எழ வேண்டிய தேவையே இல்லை. மத்திய பிரதேசத்தில் குவாலியர் சேம்பல் பிரிவைச் சேர்ந்த எந்தவொரு காங்கிரஸ் தலைவர்களிடமும் கேட்டுப்பாருங்கள், கடந்த 16 மாதங்களில் அவரது அனுமதியின்றி அந்த பகுதியில் எதுவும் நகரவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள் என்றார்.
இதுதொடர்பாக திக்விஜய சிங் தனது ட்வீட்டர் பதிவில், அவர் விலகியது வருத்தம் தான். மோடி, அமித் ஷா பயிற்சியின் கீழ் அவர் நன்றாக இருக்க நான் வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.