பாஜகவில் சிந்தியா சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- சிந்தியாவின் வெளியேற்றத்தால் காங்கிரஸ் கடும் விமர்சனங்களை சந்திக்கிறது
- சோனியா, ராகுல் தலைமையில் இளைஞர்களுக்கு நம்பிக்கையில்லை என்கிறது பாஜக
- சிந்தியா அடுத்ததாக பாஜகவில் சேர்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
New Delhi: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து விலகியுள்ள நிலையில், கட்சியில் இருக்கும் இளைஞர்களே சோனியா, ராகுல் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்று பாஜக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியில் கடந்த 18 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தவரும், கட்சியின் மூத்த தலைவருமான ஜோதிராதித்ய சிந்தியா இன்று கட்சியை விட்டு விலகினார். இது காங்கிரசுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். இதனால் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் பாஜகவில் சிந்தியா சேர்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி அவர், பாஜகவில் இணைந்தால் மாநிலங்களவை எம்.பி. பொறுப்பு அல்லது மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசிலிருந்து விலகியது தொடர்பாக பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஷானவாஸ் உசைன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் இளைஞர்கள்கூட சோனியா, ராகுல் காந்தி மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதைத்தான், ஜோதிராதித்ய சிந்தியாவின் விலகல் நமக்கு உணர்த்துகிறது. இது காங்கிரஸ் அழிவின் தொடக்கமாகும்.
நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் சோனியா, ராகுல் காந்தியின் குடும்பத்தால் இந்தியா பாதுகாப்பு பெறாது என்பதை உணர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உசைனிடம், சிந்தியா பாஜகவில் சேர்வாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'பாஜகவை நிறுவிய விஜய ராஜே சிந்தியாவின் பேரன் ஜோதிராதித்ய சிந்தியா' என்று பதில் அளித்தார்.