22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் கமல்நாத் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஹைலைட்ஸ்
- கொரோனாவை காரணம் காட்டி சட்டசபையை ஒத்தி வைக்க கோருகிறார் கமல்நாத்
- சிந்தியாவின் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் காங். அரசுக்கு நெருக்கடி
- பெரும்பான்மையை நிரூபிப்போம் என கமல்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
Bhopal: தங்களிடம் போதிய பலம் இருப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயார் என்றும் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவை கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு காரணமாக மார்ச்.26ம் தேதி வரை 10 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கமல்நாத்துக்கு ஆளுநர் லால்ஜி டான்டன் அளித்த கடிதத்தில், மார்ச்.17ம் தேதி நீங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாவிட்டால், நீங்கள் பெரும்பான்மையை இழந்ததாகக் கருதப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்த முதல்வர் கமல்நாத், எங்களிடம் பெரும்பான்மை இல்லை என்று நினைப்பவர்கள், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற, எனது ஆட்சிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
"அரசியலமைப்பு விதிகள், மற்றும் நடைமுறைகளின்படி எல்லாவற்றிற்கும் நாங்கள் தயாராக இருப்பதாக ஆளுநரிடம் தெரிவித்துள்ளேன்," என்று அவர் கூறினார்.
230 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் ஏற்கெனவே இரு இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டனர்.
இதில், 6 பேரின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டுவிட்டார். இதனால், பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 222-ஆக குறைந்துவிட்டது.
22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதற்கு முன் காங்கிரஸில் 114 உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது அக்கட்சியின் பலம் 92-ஆக குறைந்துவிட்டது.
4 சுயேச்சை எம்எல்ஏக்கள், 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள், ஒரு சமாஜ்வாதி எம்எல்ஏ என 7 உறுப்பினர்களின் ஆதரவுடன் சேர்த்து காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 99 வாக்குகள் கிடைக்கும்.
எதிரணியில், பாஜகவுக்கு 107 உறுப்பினர்கள் உள்ளனர். பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 112 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் நாளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி காங்கிரஸ் முதல்வர் கமல்நாத்திற்கு கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே பெரும்பான்மையை 12 மணி நேரத்திற்குள் கமல்நாத் அரசு நிரூபிக்க வேண்டும் என்று கோரி பாஜக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ளது.
பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக்கோரி பாஜக எம்எல்ஏக்கள் இன்று சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த கவர்னர் லால்ஜி டாண்டன், 'எல்லோரும் அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ள விதிப்படி நடக்க வேண்டும். மத்தியப் பிரதேசத்தின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும்' என்று கூறினார்.
காங்கிரசை விட்டு வெளியேறிய ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கமல்நாத் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவையை ஒத்தி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள முன்னாள் பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், 'கமல்நாத் அரசை கொரோனா காப்பாற்றாது. அவர் பெரும்பான்மையை இழந்து விட்டார். எனவேதான் நம்பிக்கை வாக்கெடுப்பைத் தவிர்க்க விரும்புகிறார்' என்று தெரிவித்தார்.