This Article is From Mar 11, 2020

21 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா; ம.பி.யில் கவிழ்கிறது காங்கிரஸ் ஆட்சி!!

Madhya Pradesh crisis: கட்சியை விட்டு வெளியேறினாலும், நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாறாது. காங்கிரசுக்குள் இனிமேலும் இருந்துகொண்டு அவற்றைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை எனச் சோனியாவுக்கு அளித்த கடிதத்தில் சிந்தியா தெரிவித்துள்ளார்.

21 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா; ம.பி.யில் கவிழ்கிறது காங்கிரஸ் ஆட்சி!!

Madhya Pradesh crisis: 20 எம்.எல்.ஏக்களுடன் ஜோதிராதித்திய சிந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது.
  • 20 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்.
  • இன்று மாலை பாஜகவில் இணைகிறார் ஜோதிராதித்ய சிந்தியா
New Delhi:

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான ஆட்சியிலிருந்து குறைந்தது 21 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து மாநிலத்தில் கடும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் மொத்தம் 230 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், ஆட்சியமைக்க 116 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவையென்ற நிலையில் போதிய பெரும்பான்மை இல்லாமல் ஆளும் அரசு தவித்து வருகிறது. 

மத்தியப் பிரதேச அரசியலில் பெரும் திருப்பமாகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேர் நேற்றைய தினம் தனி விமானத்தில் பெங்களூருவுக்கு சென்று விட்டதாகத் தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, கட்சி மீது அதிருப்தியிலிருந்த சிந்தியாவுடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடந்த முயன்ற போதும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. 

இதனிடையே, இன்று காலை ஜோதிராதித்ய சிந்தியா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு நடந்து முடிந்த சில மணி நேரத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகச் சோனியாக காந்திக்கு சிந்தியா கடிதம் அளித்துள்ளார். 

அந்த கடிதத்தில், காங்கிரஸில் அடிப்படை உறுப்பினராகக் கடந்த 18 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறேன். இப்போது நான் வெளியேறும் நேரம் வந்து விட்டது. நான் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். கட்சியை விட்டு வெளியேறினாலும், நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மாறாது. காங்கிரசுக்குள் இனிமேலும் இருந்துகொண்டு அவற்றைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என சிந்தியா தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர் பதவியை ராஜினாமா செய்வதாகச் சபாநாயகருக்குக் கடிதம் அளித்துள்ளனர். இவர்களது ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், 15 மாதங்களே ஆன கமல்நாத் ஆட்சி பெரும்பான்மையை இழக்க உள்ளது. இதனால், அங்குக் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து, இன்று மாலை மத்தியப் பிரதேசத்தின் போபால் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து சிந்தியாவை பாஜக எம்எல்ஏக்கள் சந்திக்க உள்ளனர். அதைத்தொடர்ந்து, டெல்லி பாஜக தலைமையகத்தில் வைத்து சிந்தியா அக்கட்சியில் இணைவார் என்று தகவல்கள் கூறுகின்றன. 

தொடர்ந்து, முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் அடுத்த முதல்வராக பாஜகவால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. 

.