ஹைலைட்ஸ்
- ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்கள் என்னை சந்திக்க வேண்டும்
- 6 அமைச்சர்களை நீக்க கோரி ஆளுநருக்கு முதல்வர் கமல்நாத் கடிதம்
- அதிருப்தி எம்எல்ஏக்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவார்கள் - சிவக்குமார்
Bhopal: பதவி ராஜினாமா செய்துள்ள 21 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தன்னை சந்திக்க வேண்டும் என மத்தியப் பிரதேச சபாநாயகர் பிரஜாபதி தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தான் சட்டப்படி நடப்பேன் என்றும், ராஜினாமா கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் முன்னதாக அதிருப்தி எம்எல்ஏக்கள் தன்னை சந்திக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நேற்றைய தினம் ஹோலி கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் மின்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் 15 மாதங்களே ஆன கமல்நாத் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சபாநாயகர் பிரஜாபதி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, சட்டப்படி ராஜினாமா செய்பவர்கள் முதலில் சபாநாயகரைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க வேண்டும், அதன்பின்பு இந்த விவகாரத்தில் அவர்களது தரப்பு நியாயங்கள் குறித்து யோசித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்து நாட்களில் அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகரைச் சந்திப்பார்கள் என்று தெரிகிறது. தொடர்ந்து, நேற்றைய தினம் ராஜினாமா செய்துள்ள அதிருப்தி எம்எல்ஏக்களில் உள்ள 6 அமைச்சர்களை நீக்கக் கோரி ஆளுநருக்கு முதல்வர் கமல்நாத் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த விவகாரத்திலும் ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த திங்கட்கிழமையன்று தனி விமானம் மூலம் 21 எம்எல்ஏக்களும் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறும்போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் பெரும்பாலானோர் மீண்டும் கட்சிக்குத் திரும்புவார்கள் அவர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறேன் என்றார்.
94 எம்எல்ஏக்களை காங்கிரஸ் ஜெய்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளது. மேலும், கர்நாடகாவில் தங்கவைக்கப்பட்டுள்ள சிந்தியாவுக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் 19 பேரும் பாஜகவில் இணைய மாட்டார்கள் என்றும், அதனால், பெரும்பான்மை குறித்து கவலை தேவையில்லை என்றும் மத்தியப் பிரதேசத்தை கமல்நாத் கூறியுள்ளார்.