மத்திய பிரதேச அமைச்சரவை: ஒரு விழாவில் ஐந்து புதிய அமைச்சர்கள் ஆளுநர் முன்னிலையில் பதவியேற்றனர்.
Bhopal: நாடு முழுதும் கொரோனா தொற்றால் 18,500க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் மத்தியப் பிரதேச பா.ஜ.க தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளது.
கடந்த மாதம் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ், ஆளும் கட்சியாக இருந்தது. இடையில் அக்கட்சியிலிருந்து 22 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக.வுக்கு சென்றனர். இதன் காரணமாகக் காங்கிரஸ் பெரும்பான்மையை இழந்தது. பாஜக சட்டமன்றத்தில் தனக்கான பெரும்பான்மையை நிரூபித்து அம்மாநிலத்தில் ஆட்சியமைத்தது.
இந்த நிலையில் மாநிலத்தின் அமைச்சரவையை விரிவாக்கும் முயற்சியில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சௌவுகான் ஈடுபட்டு வந்தார். அதன் விளைவாக இன்று முன்னாள் அமைச்சரும், ஆறு முறை எம்.எல்.ஏ.வுமான நரோட்டம் மிஸ்ரா, மீனா சிங், கமல் படேல், துளசிராம் சிலாவத், கோவிந்த் சிங் ராஜ்புத் ஆகியோர் கொண்ட புதிய அமைச்சரவைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற விழாவில் அம்மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் முன்னிலையில் 5 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். பொறுப்பேற்றுக்கொண்ட ஐந்து அமைச்சர்களும் மாநிலத்தின் ஐந்து வெவ்வேறான பகுதிகளின் பிரதிநிதிகளாவார்கள். இவர்கள் புண்டேல்கண்ட், மத்திய(Central) மத்தியப் பிரதேசம், மால்வா-நிமர், மகாகோஷல் மற்றும் குவாலியர்-சம்பல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவார்கள்.
நாடு கொரோனா தொற்றுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் பாஜக மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. முன்னதாக மாநிலத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட போது முககவசம் அணிந்திருக்கவில்லை. முதலமைச்சர் சவுகான், ஆளுநர் லால்ஜி டாண்டன், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் முககவசங்களை அணிந்திருந்தனர். இம்மாநிலம் தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் 7 வது இடத்தில் உள்ளது. 1,485 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 74 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் மாநிலத்தின் சில பகுதிகளில் சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மருத்துவர்கள் ஆகியோர் பொதுமக்களால் தாக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் மாநில எதிர்க் கட்சியான காங்கிரஸ், கோரோனா தொற்றுக்கு எதிராக போராடக்கூடிய நிலையில் மாநிலத்தில் சுகாதார அமைச்சர் இல்லையென விமர்சித்திருந்தது. ஆனால், மாநிலத்தின் சுகாதார அமைச்சராக முதல்வரே இருக்கிறார் என அம்மாநில கூடுதல் தலைமை செயலாளர் (சுகாதாரம்) முகமது சுலேமான் முன்னதாக கூறியிருந்தார்.
தற்போது மாநிலத்தில் சுகாதார அதிகாரிகள் அதிக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், “இந்த தகவல்கள் துறையின் பெயரை பாதித்திருக்கிறது. ஆனால், செயல்பாட்டினை பாதிக்கவில்லை.” என விளக்கமளித்திருந்தார்.