This Article is From Aug 22, 2019

Madras Day: சிங்கார சென்னைக்கு “ஹேப்பி பர்த்டே” !

பெஸ்ஸி என்று இளைஞர்களால் செல்லமாக அழைக்கப்படும் பெசண்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களையும், பிறந்தநாள் கொண்டாட்டங்களையும் இன்றும் காணமுடியும். 

Madras Day: சிங்கார சென்னைக்கு “ஹேப்பி பர்த்டே” !

Madras Day: சென்னை என்று சொல்லும்போதே நம் மனதில் தோன்றும் பிம்பங்கள் எண்ணிலடங்காதவை.  மிக நீண்ட கடற்கரையை கொண்ட மெரினாவில் தொடங்கி, சென்ட்ரல் ரயில் நிலையம், விக்டோரியா ஹால் மற்றும் ரிப்பன் பில்டிங் போன்ற பழமையான சிவப்பு நிற கட்டிடங்கள், வானுயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடங்கள், நூலகங்கள், மெட்ரோ ரயில் சேவைகள், மேம்பாலங்கள், விமான நிலையங்கள், நீதி மன்றங்கள், ஐடி நிறுவனங்கள், வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள், கோவில்கள் வரை சென்னையில் சுவாரஸ்யமான விஷயங்கள் ஏராளமாக உள்ளது.  மதம், மொழி, இனம், நாடு என எவ்வித பாகுபாடும், பேதமுமின்றி பலதரப்பட்ட மக்களை தன்னகத்தே கொண்டுள்ள சென்னை (Chennai) நிச்சயம் “வந்தோரை வாழவைக்கும்” நகரமாகவே போற்றப்படுகிறது.  

பெயர் வரலாறு (History): 

1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னப் பட்டினம் உருவானது.  அன்றைய தினத்தில் கிழக்கு இந்திய கம்பெனியை சேர்ந்த  பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தையான சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து வாங்கினர்.   அவரை நினைவுக்கூறும் வகையில் கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது.  சுதந்திரத்திற்கு பிறகு மதராஸ் என்று அழைக்கப்பட்ட நகரம் 1997 ஆம் ஆண்டு முதல் சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.   பின் 2004 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ‘சென்னை தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

vkbp3efo

சிறப்புகள்: 

முதன் முறையாக சென்னைக்கு வருபவர்கள் பார்க்க விரும்பும் இடத்தில் முதன்மையாக இருப்பது மெரினா கடற்கரை.  ஆசியாவிலேயே இரண்டாவது நீளமான கடற்கரை என்று சொல்லப்படும் மெரினாவில் எல்லா நாட்களுமே மக்கள் கூட்டம் அலைமோதுவதை காண முடியும்.  அப்படிப்பட்ட மெரினாவிற்கு மேலும் புகழ் சேர்க்கும் விதமாக நடந்ததுதான் ஜல்லிக்கட்டு போராட்டம்.  இதற்கு “மெரினா புரட்சி” என்றே பெயர் உருவானது.  சென்னையில் எத்தனையோ குறிப்பிடத்தக்க விஷயங்கள் இருந்தாலும், பெரும்பாலான திரைப்படங்களில்,  தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய சென்ட்ரல் ரயில் நிலையமும், அண்ணா சாலையில் அமைந்திருக்கும் எல்ஐசி கட்டிடமும் தான் சென்னையை காட்சியாக அடையாளப்படுத்த பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 

சென்னை பட்டினப்பாக்கத்தில் இருக்கக்கூடிய புரோக்கன் பிரிட்ஜில் தான் தமிழ் சினிமாவின் காதல் காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் படமாக்கப்பட்டது.  பல புயல்களால் பாதிக்கப்பட்ட இந்த புரோக்கன் பிரிட்ஜ் தற்போது வார இறுதி நாட்களின் சுற்றுலா தலமாக மாறிவிட்டது.  சினிமா துறையின் தலைநகராகவே சென்னை பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.  பெஸ்ஸி என்று இளைஞர்களால் செல்லமாக அழைக்கப்படும் பெசண்ட் நகர் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களையும், பிறந்தநாள் கொண்டாட்டங்களையும் இன்றும் காணமுடியும்.  ஷாப்பிங் என்றாலே அது தியாகராய நகர் தான்.  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் ஷாப்பிங்காக தினமும் ஏராளமான மக்கள் குவிந்திருப்பதை காணலாம்.  மருத்துவம் தொடங்கி தொழில்நுட்பம் வரை நம் சென்னை எல்லாவற்றிற்கும் முன்னோடியாக திகழ்கிறது. 

வேலைக்காகவும், படிப்பிற்காகவும் சொந்த மாவட்டங்களை விட்டு வெளியேறுபவர்களுக்கு சென்னை எப்பொழுதுமே அடைக்கலம் கொடுக்கிறதென்பது மறுக்க முடியாத உண்மை.  பல சுனாமிகளையும், புயல்களையும், இழப்புகளையும், போராட்டங்களையும் சந்தித்த கலாச்சார தலைநகரமான சென்னை இன்றளவும் அதன் கம்பீரமும் வசீகரமும் மாறாமல் தன்னை நம்பி வருவோரை அள்ளி அரவணைத்து கொள்கிறது என்று சொன்னால் மிகையாகாது.  இன்றுடன் சென்னைக்கு வயது 380.  “எங்க சென்னை தான் கெத்து” என்று சொல்பவர்கள் அனைவருக்கும் “சென்னை தின' வாழ்த்துகள்!!

Happy Madras Day!!

.