This Article is From Jul 10, 2018

தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை உறுதி..!- உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

Advertisement
Tamil Nadu Posted by (with inputs from Others)

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த 2017 ஆம் ஆண்டு, சென்னை, போரூரில் சிறுமி ஹாசினியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, தூக்குத் தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

போரூரை அடுத்த மதனந்தபுரத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிறுப்பில் பெற்றோருடன் வசித்து வந்தார் 6 வயது சிறுமி ஹாசினி. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி திடீரென்று காணாமல் போனார். இதையடுத்து, ஹாசினியின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர். காவல் துறை நடத்திய விசாரணையில் அதே குடியிறுப்பில் வசித்து வந்த தஷ்வந்த் என்பவர் ஹாசினியை பாலியல் துன்புறத்தலுக்கு உட்படுத்தி, எரித்துக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீஸ் தஷ்வந்தை கைது செய்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு, காஞ்சிபுரம் மகளிர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணை முடிந்த பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி, தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தஷ்வந்த் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தஷ்வந்த் மேல்முறையீடு மனுவில், பல்வேறு குளறுபடிகள் இந்த வழக்கில் இருப்பதாகவும் அதனால் தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து இன்று விசாரணைக்கு வந்த மேல்முறையீடு வழக்கில், ‘தஷ்வந்துக்கு கொடுக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உறுதி செய்கிறோம்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement