This Article is From Jun 29, 2018

சென்னை - சேலம் சாலைக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்!

நிலம் கையகப்படுத்தும் பணியை சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி ‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை - சேலம் சாலைக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்!

ஹைலைட்ஸ்

  • சென்னை- சேலம் இடையே 270 கி.மீ-க்கு 8 வழிச் சாலை அமைய உள்ளது
  • இந்தத் திட்டத்துக்கு எதிராக சூழலியலாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்
  • 'பூவுலகின் நண்பர்கள்' சார்பில் இந்தத் திட்டத்துக்கு எதிராக வழக்கு

சென்னை-சேலம் எட்டு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய  மற்றும் மாநில அரசுகளை பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது

சென்னை- சேலம் இடையிலான 8 வழிச்சாலை சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சுமார் 270 கி.மீ தொலைவில் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான நிலம் கையப்படுத்தும் பணி அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், விவசாயிகள் மத்தியிலும் சூழலியல் ஆர்வலர்கள் மத்தியிலும் இந்தத் திட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இத்திட்டத்தால் 2,000 ஏக்கர் விலை நிலங்கள் முற்றிலும் அழிந்துவிடும் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் இந்தத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை சட்ட விரோதமாக அறிவிக்கக் கோரி பூவுலகின் நண்பர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

மனுவில், ‘பொதுமக்களின் நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு "நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறு வாழ்வு, மறு குடியமர்வு மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மை" சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக அறிவிப்பானை அரசிதழில் வெளியான 21 நாட்களுக்குள் மக்கள் கருத்து கேட்கப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது.

2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தில் உள்ள பிரிவு 105ன் படி, இந்த சட்டத்தின் அம்சங்கள் 13 பிற சட்டங்களுக்குப் பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. அந்த 13 சட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956 சட்டமும் ஒன்றாகும். இதனால் சமூக பொருளாதார தாக்க ஆய்வும், பொதுமக்கள் கருத்துக் கேட்பும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என ஆகிறது. இது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமையை தடுப்பதாக உள்ளது.

எனவே 2013 ஆம் ஆண்டு சட்டத்தின் பிரிவு 105 மற்றும் தற்போது நடைபெற்று வரும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை சட்ட விரோதம் என அறிவித்து தடை விதிக்க வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டது.

இந்த மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது நீதிமன்றம். அப்போது மத்திய அரசு சார்பல் வாதாடிய கூடுதல் சொலிசடர் ஜெனரல் ராஜகோபாலன், ‘மனு தாரர் இந்த நிலம் கையகப்படுத்தும் பணியால் நேரடியாக பாதிக்கப்பட்டவரில்லை. எனவே, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கோரினார். ஆனால் நீதிமன்றம், ‘மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ள விஷயங்கள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். வழக்கு மீண்டும் ஜூலை 12 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டது.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.