This Article is From Feb 19, 2020

இஸ்லாமிய அமைப்புகளின் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்குத் தடை விதித்தது உயர் நீதிமன்றம்!!

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், அந்த சட்டத்திற்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் இஸ்லாமிய அமைப்புகள் நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தன.

இஸ்லாமிய அமைப்புகளின் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்குத் தடை விதித்தது உயர் நீதிமன்றம்!!

சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இஸ்லாமிய அமைப்புகளின் சட்ட மன்ற முற்றுகைப் போராட்டத்திற்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், அந்த சட்டத்திற்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் இஸ்லாமிய அமைப்புகள் நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை அறிவித்திருந்தன. 

இந்த நிலையில் சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த வாராகி என்பவர், சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் தனது மனுவில், தமிழகம் முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருகின்றனர். 

சென்னையில் சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளன. இது நடைபெற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் சட்டம் ஒழுங்கும் பாதிப்பு அடையும். எனவே இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியளிக்கக் கூடாதென உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு அவசர வழக்காகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்ய நாராயணனன், ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. 

இதில் அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ராஜகோபால், போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனுமதியளிக்கப்படாத போராட்டங்கள் நடத்தப்படுவதற்கு அனுமதி கிடையாது என்று கூறி, மார்ச் 11-ம் தேதி வரையில் போராட்டம் நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். 

அனுமதியின்றி முற்றுகை போராட்டம் நடந்தால், அப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் காவல்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர். 

.