This Article is From Oct 16, 2018

ஆன்லைனில் பட்டாசு விற்க இடைக்கால தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆன்லைனில் பட்டாசு விற்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஆன்லைனில் பட்டாசு விற்க இடைக்கால தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஆன்லைன் பட்டாசு விற்பனையானது, வெடிப்பொருட்கள் விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு எதிராக உள்ளது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

Chennai:

பட்டாசு விற்பனையாளர்கள் நஷ்டம் கருதியும், பாதுகாப்பு கருதியும் ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு எதிராக மனுதாரர் தொடர்ந்த வழக்கில், நவம்பர் 15ஆம் தேதி வரை ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இந்த இடைக்கால ஒழுங்கு உத்தரவை பிறப்பித்து, வெடிபொருட்கள் கட்டுபாட்டு அதிகாரிகள் மற்றும் சென்னை காவல் ஆணையருக்கும் நோட்டீஸ் வழங்கினார்.

ஆன்லைன் பட்டாசுகளை சில்லறை விற்பனை செய்வதை தடை விதிக்க வேண்டும் என சென்னை மெட்ரோ பையர் ஓர்க்ஸ் டீலர்ஸ் அசோசியேஷனில் உறுப்பினர் சேக் அப்துல்லா சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த செப்.23ஆம் தேதி மனுதொடர்ந்தார். அந்த மனுவில்,

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பல்வேறு பெயர்களில் ஆன்லைன் மூலம் தங்களின் பொருள்களை விற்பனை செய்ய நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. அதே போல் பட்டாசு விற்பனை தொடர்பாக விளம்பரங்கள் ஆன் லைன் மூலமாக வெளியிடப்படுகின்றன.

உரிய உரிமங்கள் இல்லாமல் ஆன் லைனில் பட்டாசுகள் விற்பனை செய்வதை தடை செய்யும்படி, வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையருக்கு உரிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். இது போன்ற விற்பனைக்கு எந்த விதமான அனுமதியும் இல்லை. எனவே ஆன்லைனில் பட்டாசு விற்பனையை தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக தமிழக அரசு, சென்னை மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

.