தமிழனால் தமிழ்த்தேர்வில் வெற்றிபெற முடியாதா என்று டிஎன்பிஎஸ்சி தமிழ் தேர்வில் தோற்ற மனுதாரரிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். பள்ளிபடிப்பில் ஆங்கில வழியில் படித்த இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மின்வாரியத்தில் இளநிலை உதவியாளராக சேர்ந்தார். தமிழ் வழிக்கல்வி இல்லை என்பதால் 2 ஆண்டுகளுக்குள்ளாக டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ்த்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது மின்வாரிய விதி. ஆனால், ஜெய்குமார் டிஎன்பிஎஸ்சி தமிழ்த்தேர்வில் தேர்ச்சி பெறாததால் கடந்த ஜூன் மாதம் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜெய்குமார் வழக்குத்தொடர்ந்தார்.அதில் மனுதாரர் தான் தமிழன் என்றும், தன்னை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிடுமாறும் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் தன்னை ஒரு தமிழன், தாய் மொழி தமிழ் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரால் தமிழ்த் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லையே என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், தமிழில் பேசினால் மட்டும் போதாதது, எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்றும், டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதைத் தெரிந்திருந்தும், மனுதாரர் அதில் ஆர்வமில்லாமல் இருப்பதாக கூறினர்.
மின்வாரிய விதிப்படி 2 ஆண்டுகளுக்குள்ளாக டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாததால், அவரை பணி நீக்கம் செய்தது சரிதான் என்று கூறிய நீதிபதிகள், இருப்பினும் அவரது வாழ்வதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில், ஒரு வாய்ப்பை அளிக்கலாம் என்று கூறி, அடுத்து வரும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்று கூறினர். அதுவரையில் பணி நீட்டிப்பு செய்யலாம் என்றும், வரக்கூடிய தேர்வில் தேர்ச்சிப்பெறாவிட்டால் பணி நீக்கம் செய்யலாம் என்றும் உத்தரவிட்டனர்.