This Article is From Jun 13, 2018

நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள்… தமிழக அரசை விளாசிய உயர் நீதிமன்றம்!

தமிழக அரசை சரமாரியாக கேள்வி கேட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள்… தமிழக அரசை விளாசிய உயர் நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்றம்

ஹைலைட்ஸ்

  • நீட் தேர்வு தோல்வியால் இந்த ஆண்டு 2 தமிழக மாணவிகள் தற்கொலை
  • சென்ற ஆண்டு அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்
  • இன்னும் 2 வாரங்களில் தமிழக அரசை பதிலளிக்க சொல்லியுள்ளது நீதிமன்றம்
Chennai: நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத காரணத்தால் இந்த ஆண்டு மட்டும் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், இது குறித்து தமிழக அரசை சரமாரியாக கேள்வி கேட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

மருத்துவ கல்வி படிக்க நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. நீட் தேர்வுக்கு தனியாக பயிற்சி எடுக்க வேண்டும் என்ற காரணத்தால் தமிழகத்தைச் சேர்ந்த கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்த நிலையில் உள்ளது. சென்ற ஆண்டு அனிதா என்ற அரியலூரைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். 

இந்த ஆண்டும் திருச்சி மற்றும் திருவண்ணாமலையைச் சேர்ந்த இரண்டு தமிழக மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற காரணத்தால் தற்கொலை செய்து கொண்டனர். இது நீட் தேர்வு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில் சென்னை உயர் நீமின்றத்தில் ஏ.பி.சூரியபிரகாசம் என்ற வழக்கறிஞர், ' 'கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 24 ஆம் தேதி, இனியும் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை வரக் கூடாது. அதைப் போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது போன்ற விஷயங்களைச் செய்ய வேண்டும்' என்று உயர் நீதிமன்றம் தமிழக அரசை பணித்தது. ஆனால் இதை சரியாக செயல்படுத்தப்படவில்லை. எனவே, நீதிமன்ற அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றொரு வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், 'இந்த விஷயம் குறித்து தமிழக அரசு இன்னும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும். அதே நேரத்தில் தமிழக அரசு மட்டும் மாணவர்களின் மரணத்துக்கு பொறுப்பாக முடியாது. அவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்துகிற பெற்றோர்களும் தற்கொலைகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றனர். நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத மாணவர்களின் தற்கொலையை அரசியல் லாபத்துக்காக கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. சென்ற ஆண்டு உயர் நீதிமன்ற விதித்த நடைமுறைகளை செயல்படுத்தாத காரணத்தால் தான் இந்த ஆண்டும் தற்கொலைகள் தொடருகின்றன' என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து வழக்காடிய தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிஷங்கர், 'மாணவர்களின் மரணத்துக்கு தமிழக அரசை குற்றம் சொல்ல முடியாது. சென்ற ஆண்டு தான் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது முழுமையாக சென்றடைய இன்னும் சில காலமாகும்' என்று விளக்கம் அளித்துள்ளார்.
.