சென்னை - சேலம் இடையே 10,000 கோடி ரூபாய் செலவில் 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். நில உரிமையாளர்கள் நிலத்தை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் எனவு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யாமல், அரசு நிலத்தை கையகப்படுத்துவதாக மனு தாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது.
10,000 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சரின் நேரடி முயற்சியில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 8 வழிச்சாலை விவசாய நிலங்கள், மலைகள் மற்றும் காடுகளை அழித்து உருவாக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவவே இந்த திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் குற்றச்சாட்டுகளை மறுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டம் தொலை நோக்கு பார்வை கொண்டது என்றும், சென்னை சேலம் இடையே பயண நேரத்தை குறைக்கும் என்றும் கூறுகிறார்.