எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வத்தை இணைத்து வைக்கும் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
ஹைலைட்ஸ்
- கடந்த செப்டம்பரில் 18 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்
- தீர்ப்பு எம்.எல்.ஏ-க்களுக்கு சாதகமாக வந்தால் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி
- ஆளுநரிடம் 18 எம்எல்ஏ-க்கள் முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்தனர்
Chennai: அதிமுக-வைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்கள் சென்ற ஆண்டு, முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய காரணத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து எம்.எல்.ஏ-க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட உள்ளது.
ஜெயலலிதா இறந்த பின்னர் அ.தி.மு.க சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி என்று இரண்டாக பிரிந்தது. இதையடுத்து, சசிகலா அணியிலிருந்து
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈ.பி.எஸ் அணி பிரிந்தது. சிறிது காலம் கழித்து ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. ஆனால், சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர். அந்தக் கடிதத்தில், 'முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்று கூறினர்.
முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர் என்ற காரணத்தை முன் வைத்து, 18 எம்.எல்.ஏ-க்களையும் தன் அதிகாரத்தை வைத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்தார் தமிழக சபாநாயகர் தனபால். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் தற்போது மொத்தம் 215 எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். இதில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக 113 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர். தனியரசு, கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகிய மூவர் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரனுக்கு ஆதரவாக இருப்பர் என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் 98 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஒரு வேளை 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால், மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 ஆக மாறும். அப்போது அதிமுக பக்கம் 117 பேர் இருந்தால் மட்டுமே ஆட்சி நடத்த முடியும். இதனால், இன்றைய தீர்ப்பு ஆட்சி தொடருமா இல்லையா என்பதை கணிக்கக்கூடிய வகையில் இருப்பதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
அதே நேரத்தில் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி தப்பிக்கும். ஆனால், சீக்கிரமே இடைத் தேர்தல் வரும். சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இவை இரண்டும் அல்லாமல், நீதிமன்றம், சபாநாயகர் தனபாலை தன் முடிவில் திருத்தம் செய்யச் சொல்லியும் கூறலாம். இப்படி நீதிமன்றம் கூறும் பட்சத்தில் 18 எம்.எல்.ஏ-க்கள் தனபாலிடம் நடந்த சம்பவங்களுக்கு வருத்தம் தெரிவித்தால், மீண்டும் அவர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவாக மாற வாய்ப்புள்ளது.