This Article is From Apr 17, 2019

மதுரை சித்திரைத் திருவிழா: வாராரு வாராரு அழகர் வாராரு

சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். 

மதுரை சித்திரைத் திருவிழா: வாராரு வாராரு அழகர் வாராரு

தென் தமிழகத்தில் மிகவும் பிரபலமான திருவிழா என்றால் அது சித்திரைத் திருவிழாதான். 15 நாள் கொண்டாட்டமாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார். 

மதுரை மீனாட்சியின் அண்ணனான அழகர் தங்கையின் திருமணத்திற்கு வருவதாகவும், வருவதற்குள் திருமணம் முடிந்து விடவே ஆற்றிலிருந்து அப்படியே திரும்பி விடுவதாகப் புதிய கதையும் புனையப்பட்டது. உண்மையில் மண்டூக மகரிசிக்கும் நாரைக்கும் சாப விமோசனம் அளிக்க அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார் என்பதே திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்பிருந்த பழைய புராணம்.

ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்ரா பௌர்ணமித் திருநாள் தான் . மதுரை ஸ்ரீ மீனாட்சிக் கோயிலில் தொடங்கும் சித்திரைத் திருவிழாவும் இவ் விழாவும் ஒரே சமயத்தில் நடக்கின்றன . திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு இந்த இரண்டு உற்சவங்களும் வெவ்வேறு மாதங்களில் நடந்தன. இதனால் தான் மாசி மாதத்தில் நடக்கும் இத் திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர்களுடைய ரதம் செல்லும் வீதிகளுக்கும் மாசி வீதிகள் என்று பெயர் ஏற்பட்டது . 

திருமலை காலத்திற்கு முன்பு ஸ்ரீ அழகர் சித்திரை மாதத்தில் அலங்காநல்லூர் , தேனூர் முதலிய ஊர்கள் வழியாக வந்து வைகை ஆற்றில் இறங்கி வண்டியூரில் தங்கியிருந்து , மீண்டும் அழகர் மலையையைடைவது வழக்கம் . திருமலை நாயக்கர் , இந்த இரண்டு விழாக்களையும் ஒன்றாகச் சேர்ந்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று கருதி அப்படியே செய்தார் . அவருடைய ஏற்பாட்டின் படியே இப்பொழுதும் நடந்து வருகிறது.

ஸ்ரீ அழகர் ஆற்றுக்குச் செல்லும் பொழுது முதலில் வெட்டி வேர் சப்பரத்திலும் , பிறகு மைசூர் மண்டபத்திலிருந்து ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்து அருள்வார். ஆற்றில் எழுந்தருளியருளும் மதுரை ஸ்ரீ வீர ராகவப் பெருமாள் அவரை எதிர் கொண்டு அழைக்கிறார் . இந்த வைபவம் அழகர் ஆற்றில் இறங்குதல் என்று சொல்லப்படும் இதனைக் காண இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு இதைக் காண  வருகை தருவார்கள்.

.