மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர் தேர்வில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் தேதி அறவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.
இந்தநிலையில் மதுரையைச் சேர்ந்த வக்கீல் ரமேஷ், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்குக்கு பணம் பெறுவதும் கொடுப்பதும், குற்றம் என்பதை மக்களும், வேட்பாளர்களும் உணர வேண்டும். அது தவிர்க்கப்பட்டால் மட்டுமே நியாயமாக தேர்தல் நடைபெற்று சரியான நபரைத் தேர்வு செய்ய இயலும்.
கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக செய்திகள் வெளியாகின. அதே போல 2016-ல் நடந்த தமிழக சட்டசபை தேர்தலின் போது பணம் பட்டுவாடா செய்யப்பட்டது.
இதே குற்றச்சாட்டை முன் வைத்து அப்போது நடக்க இருந்த தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதி தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன. இந்த நிலை வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் தொடரலாம். எனவே, இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணித்து ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்யும் நடைமுறையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, சென்னை உயர்நீதிமன்றம் பிளக்ஸ் போர்டு, பேனர்களை வைப்பது தொடர்பாக ஏற்கனவே பல உத்தரவுகளை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டியது. தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சியினரின் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்க இடைக்கால தடை விதிக்கப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதேபோல அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரக்கூட்டங்களுக்கு மக்களை அதிக அளவில் லாரி, பேருந்து, ஆட்டோ, வேன் ஆகியவற்றில் அழைத்துச் செல்வதையும் பார்க்க முடிகிறது என்று கூறிய நீதிபதிகள், அரசியல் கட்சியினர் தங்களது கூட்டங்களுக்கு மக்களை வாகனங்களில் அழைத்துச் செல்ல தடை விதித்தனர். அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் இடங்களுக்கு பெரும் அளவில் மக்களை அழைத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்க்க தாமாக முன்வந்து உத்தரவிட்ட நீதிபதிகள், நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.