மதுரை அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதனைக் காண சுற்று வட்டாரங்களில் இருந்தும், ஏராளமான பொதுக்கள் குவிந்தனர்.
இதில் பங்கேற்பதற்காக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் காளைகளை வளர்த்து வந்தனர். தமிழகத்தில் பிரபலமாக இருப்பவர்கள் பலரும் காளைகளை ஜல்லிக்கட்டில் களம் இறக்கியுள்ளனர். அந்த வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் விஐபி-க்கள் காளைகள் போக்கு காட்டின.
குறிப்பாக டிடிவி தினகரனின் காளை, இலங்கை அமைச்சர் தொண்டைமானின் காளை, சசிகலாவின் காளை, அதிமுக, திமுக பிரபலங்கள் சிலரின் காளைகள் போட்டியில் இடம்பெற்றன.
டிடிவி தினகரனின் காளை மீது ரூ. 5 ஆயிரம் ரொக்கம் அறிவிக்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து வெளிவந்த காளை இளைஞர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றது. மிரண்டுபோன இளைஞர்களால் காளையை நெருங்கவில்லை.
உசிலம்பட்டி எம்.எல்.ஏ.வின் காளை பிடிபட்டுச் சென்றது. சசிகலாவின் காளை கருப்பு நிறத்தில் இருந்தது. வாடிவாசலில் இருந்தே துள்ளிய காளை, யாரிடமும் பிடிபடாமல் சென்று விட்டது. இலங்கை அமைச்சர் தொண்டைமானின் காளை, அமைச்சர் செல்லூர் ராஜுவின் தம்பியின் காளை உள்ளிட்டவையும் போக்கு காட்டி விட்டுச் சென்றன.
காளைகளை பிடித்த இளைஞர்களுக்கு ஓ.பி.எஸ்., தமிழக அமைச்சர்கள், பாஜக தலைவர் தமிழிசை மற்றும் பல்வேறு வியாபார நிறுவனங்கள் பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தின.