This Article is From Apr 27, 2019

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன: தேர்தல் ஆணையம்

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் கடந்த 18ம் தேதி 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிவடைந்தது. மதுரை மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன.

இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து சம்மந்தப்பட்ட அந்த பெண் அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனைத்தொடர்ந்து, பெண் தாசில்தார் பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும் அவருக்கு உதவியதாக 3 அதிகாரிகள் பிணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் சென்றது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். மதுரை ஆட்சியரின் உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது? வட்டாட்சியருக்கு உள்ள அதிகாரம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு இல்லையா? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. உதவி தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் தாசில்தார் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார். தலைமை தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை குறித்து முடிவெடுக்க 2 நாள் அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.