This Article is From Jun 25, 2018

ஃபெராரி காரை ஓட்டி ஆச்சரியத்தில் ஆழ்த்திய முதல் சவுதி அரேபிய பெண்

ஃபார்முலா ஒன் காரை ஓட்டி, சவுதி அரேபியாவின் அசீல் அல்-அஹமத் என்ற பெண் அசத்தியுள்ளார்

ஃபெராரி காரை ஓட்டி ஆச்சரியத்தில் ஆழ்த்திய முதல் சவுதி அரேபிய பெண்
இந்த ஆண்டு ஜூன் மாதம், பெண்களுக்கான வாகனம் ஓட்டுவதற்கான உரிமத்தை அளித்து, பல ஆண்டுகளாக இருந்த தடைக்கு முற்றுப்புள்ளி வைத்தது சவுதி அரசு. இதை அடுத்து ஃபார்முலா ஒன் காரை ஓட்டி, சவுதி அரேபியாவின் அசீல் அல்-அஹமத் என்ற பெண் அசத்தியுள்ளார்.

“நாட்டில் உள்ள பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டதை கொண்டாடுவதோடு மட்டும் அல்லாமல், மோட்டார் ஸ்போர்டுகளிலும் பெண்கள் கலந்து கொள்ளும் நேரம் இது என நம்புகிறேன்” என்று அசீல் அல்-ஹமத் தெரிவித்தார்.

“அடுத்த தலைமுறை இளம் பெண்களும் மோட்டார் ஸ்போர்டுகளில் கலந்து கொள்வதை பார்க்க நான் ஆவலுடன் உள்ளேன். அவர்களுக்கான உரிய பயிற்சியை அளிக்க காத்து கொண்டிருக்கிறேன். அதுவே என்னுடைய வாழ்வின் வெற்றியாக இருக்கும்” என்று அல்-ஹமத் கூறினார்.

கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதம் சவுதி அரேபியா மன்னர் சல்மான் பெண்களுக்கான ஓட்டுநர் உரிமத்துக்கான தடையை நீக்கி உத்தரவிட்டார். சவுதி அரேபிய இளவரசர் பெண்கள் மீதுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி மன்னரிடம் கேட்டுக்கொண்டதால், தடை நீக்கம் செய்யப்பட்டது.

கடந்த 2012 ஆம் ஆண்டு, அபுதாபியில் நடைப்பெற்ற பந்தயத் தொடரில் வெற்றி பெற்ற கிமி ரெய்க்கோனென் ஓட்டிய காரை அல் அஹமது ஓட்டினார். “சுற்றிலும் பார்வையாளர்கள் இருக்க, எந்த பிரச்சனையும் இன்றி காரை இயக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாததாக இருக்கும்” என்றார்

சவுதி அரேபியா மோட்டார் ஸ்போர்ட் அமைப்பின், முதல் பெண் உறுப்பினராக அல்-ஹமத் இணைந்துள்ளார். பார்முலா ஒன் கட்டமைத்த பெண்களுக்கான மோட்டார் ஸ்போர்டு கமிஷனிலும் பணியாற்றி வருகிறார். மேலும், சவுதி அரேபியாவுக்குள் ஃபெராரி காரை கொண்டு வந்த முதல் பெண் என்ற பெருமையும் அல் அஹமதுக்கே.

சவுதி அரேபியாவில் இனி பெண்கள் ரேஸ்கார்களை ஓட்ட வருவார்கள் என்று நம்புகிறேன். பெண்களை பங்கேற்கச் செய்வது தான் தனது வாழ்நாள் லட்சியம் என்கிறார் அசீல் அல் அஹமது.

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.