Jakarta, Indonesia: இந்தோனேசியா, லோம்பாக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை 82 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் பல நூறு பேருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை சுமார் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுற்றுலா தளமான லோம்பாக்கை தாக்கியது. இது அருகிலிருந்த பாலி தீவுகளிலும் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், பின்னர் அந்த எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. இதனால், அங்கு பதற்றமான நிலையே பல மணி நேரம் நீடித்தது.
இந்த துயர சம்பவம் குறித்து தேசிய பேரிடர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுடோபோ புர்வோ நுக்ருஹோ, ‘நிலநடுக்கத்தை அடுத்து, சுனாமி எச்சரிக்கை அரசு சார்பில் விடப்பட்டது. இது திரும்ப பெறப்பட்டது. ஆனால், மக்கள் சுனாமி வரும் என்ற அச்சத்தில் பதற்றமடைந்தே இருந்தனர்’ என்றார் கவலையுடன்.
நிலநடுக்கத்தை அடுத்து, நகரத்தின் பெரும் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மக்கள் அவசர அவசரமாக பத்திரமான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
சிங்கப்பூரின் உள்துறை அமைச்சர் கே.சன்முகம் பாதுகாப்பு சார்ந்த ஒரு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக லோம்பாக்கில் தான் இருந்துள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில், ‘எனது கட்டடத்தில் இருக்கும் சுவர்கள் விரிசலடைந்தன. நிலையாக ஒரு இடத்தில் நிற்பதற்கே கடினமாக இருந்தது’ என்று பதிவிட்டிருந்தார்.
சுனாமி தாக்குதல் நடைபெறாது என்று கூறப்பட்டிருந்த நிலையிலும், லோம்பாக்கின் அருகிலிருந்த கிராமங்கள் சிலவற்றில் கடல் நீர் உள்ளே புகுந்தது. பாலி சர்வதேச விமானநிலையத்திலும் நிலநடுக்கம் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால், ரன்-வேயில் எந்த பாதிப்பும் இல்லததால், தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
சென்ற வாரம் லோம்பாக்கில் ரிக்டர் அளவில் 6.4 என்று பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2004 ஆம் ஆண்டு, இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதிக்குப் பக்கத்தில் 9.3 என்ற ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இந்தியப் பெருங்கடலை ஒட்டியிருந்த தேசத்தைச் சேர்ந்த 220,000 மக்கள் கொல்லப்பட்டனர். இந்தோனேசியாவிலிருந்து மட்டும் 168,000 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.