Cyclone Warning: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய புயலால் மழையின் தாக்கம் அதிகரிக்குமா என்பது தெரியவில்லை.
Cyclone Warning: அரபிக் கடலில் புதியதாக ‘மகா' என்ற புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம், ‘லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் இருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, கடந்த 6 மணி நேரத்தில் 25 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலானது, தொடர்ந்து வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு அரபிக் கடல் நோக்கி நகரும் என்று கணிக்கப்படுகிறது. அரபிக்கடலில் உருவான புயலுக்கு ‘மகா' என பெயரிடப்பட்டுள்ளது. நாளை மதிய நேரத்தில் இந்த புயலானது, லட்ச்சத்தீவு பகுதிகளுக்கு மேல் அதி தீவிர புயலாக உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீ. மேற்கு வடமேற்கு திசையில் மகா புயல் நிலைகொண்டுள்ளது. லட்சத்தீவு பகுதியில் இருந்து 25 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது,' என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அரபிக் கடலில் உருவாகியுள்ள புதிய புயலால் மழையின் தாக்கம் அதிகரிக்குமா என்பது தெரியவில்லை. அது குறித்து வானிலை மையம் விரைவில் தகவல் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.