Maha Shivratri 2019: 22 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இந்த ஆண்டில் புனித நீராடியுள்ளனர்.
Prayagraj: Maha Shivratri 2019: மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நாளையுடன் கும்பமேளாவில் புனித நீராடுதல் சடங்கு நிறைவு பெறுகிறது. உலகிலேயே மத சடங்குகளுக்காக மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் விழாக்களில் கும்பமேளாவும் ஒன்று. கடந்த ஜனவரி 15-ம்தேதி தொடங்கிய இந்த விழா நாளையுடன் நிறைவு பெறுகிறது.
நடப்பாண்டில் மட்டும் 22 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கும்ப மேளாவில் புனித நீராடியுள்ளனர்.
இதுகுறித்து பிரக்யா ராஜில் அமைந்திருக்கும் ராம் நாம் வங்கியின் தலைவர் குஞ்சன் வர்ஷ்னே கூறுகையில், ‘'மகா சிவராத்திரி அன்றுதான் கடைசி புனித நீராடல் இருக்கும். இது சிவபெருமானுடன் நேரடியாக தொடர்புடையது. புராணங்களின்படி சொர்க்கத்திலும் இந்த நாளுக்காக காத்திருப்பு நடைபெறுகிறது. இந்த நாளில்தான் சிவபெருமான் திருமணம் முடித்தார் என்ற நம்பிக்கையும் உண்டு'' என்று தெரிவித்தார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்பமேளாவில் ஏராளமான பக்தர்கள் கூடியுள்ளனர். இதுபற்றி பக்தர் அசுதோஷ் வர்ஷ்னே என்பவர் கூறும்போது, ‘' மகா சிவராத்திரிதான் கும்பமேளாவின் மிக முக்கியமான நாள். இந்தாண்டு திங்கள் கிழமை மகா சிவராத்திரி வருகிறது. இந்த நாள் சிவபெருமானுக்கு சமர்ப்பணம். மிக நீண்ட காலத்திற்கு பிறகு திங்களன்று சிவராத்திரி வருகிறது'' என்றார்.
உலகிலேயே மத வழிபாடுகளுக்காக மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் பண்டிகைகளில், கும்பமேளாவும் ஒன்று. உத்தரப்பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் நடைபெறும் இந்த பண்டிகை ஜனவரி 15-ல் தொடங்கி மார்ச் 4- வரை நடைபெறுகிறது.
கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பமேளாவில் 6 நாட்கள் புனித நீராடலுக்காக ஒதுக்கப்பட்டன.
ஜனவரி 15-ல் மகர சங்கராந்தி, பிப்ரவரி 4-ல் மவுனி அமாவாசை, பிப்ரவரி 10-ல் பசந்த் பஞ்சாமி, ஜனவரி 21-ல் பவுஷ் பூர்ணிமா, பிப்ரவரி 19-ல் மகி பூர்ணிமா மற்றும் நாளை நடைபெறும் மகா சிவராத்திரி ஆகிய 6 நாட்களில் புனித நீராடுவது சிறப்பானது.
கடந்த 55 ஆண்டுகளில் 22 கோடி மக்கள் கும்பமேளாவில் பங்கெடுத்துள்ளனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா கொண்டாடப்படுகிறது.