நாளை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார்.
Mumbai: மகாராஷ்டிரா முதல்வராவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி 80 மணி நேரத்தில் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். இதையடுத்து, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தால், தேவேந்திர ஃபட்னாவிஸூம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து, நாளைய தினம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பதவியேற்கிறார். இந்நிலையில்,
மகாராஷ்டிரா முதல்வராவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உருக்கமாக தெரிவித்துள்ளார். இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 105 தொகுதிகளை கைப்பற்றியது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 145 எம்எல்ஏக்கள் தேவையென்ற நிலையில், பாஜகவுக்கு பெரும்பான்மயை நிரூபிக்க 40 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது.
முன்னதாக, மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5.47 மணி அளவில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பபெறப்பட்டு, காலை 7.50 மணி அளவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
மகாராஷ்டிராவில் எதிர்பாராத அரசியல் திருப்பமாக ஆட்சியமைத்த பாஜகவுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், திடீரென ஆட்சி அமைப்பது, ஜனநாயக விரோதமானது என்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்திருந்தன.
இந்த வழக்கு விசாரணையில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை தங்களுக்கு இருப்பதாகவும், துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 54 எம்எல்ஏக்கள் உட்பட 170 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதன் அடிப்படையிலே ஆளுநர் பகத்சிவ் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்று மத்திய அரசு தரப்பு தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க காலதாமதம் ஆனால், குதிரை பேரத்திற்கு வாய்ப்பு உள்ளதால் ஜனநாயகத்தை காக்கும் கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது. இதுபோன்ற நேரத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதே சரியானதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் 20 வருடங்களுக்கு பின்னர் சிவசேனா மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. மேலும், தாக்கரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் முதன் முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளனர். கடந்த மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.