தேர்தல் அறிக்கையுடன் சிவசேனா தலைவர்கள்.
Mumbai: மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் ரூ. 10-க்கு மதிய உணவு வழங்கும் 10 ஆயிரம் உணவகங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் என்று சிவசேனா கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் 21-ம்தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக - சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. எதிர்த்தரப்பில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைந்துள்ளது. இந்த நிலையில் சிவசேனா தரப்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை குறித்து சிவசேனா தலைவர்களில் ஒருவரான ஆதித்யா தாக்கரே கூறியதாவது-
ஏழை மக்களுக்கு மதிய உணவை ரூ. 10-க்கு வழங்கும் வகையில் மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் உணவகங்கள் ஏற்படுத்தப்படும். இங்கு பெண்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். பள்ளிகளுக்கு செல்ல போக்குவரத்து காரணமாக சிரமப்படுபவர்களுக்காக கிராமங்களில் சிறப்பு பேருந்து சேவை ஏற்படுத்தப்படும்.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். ஒவ்வொரு வாக்குறுதியும் மிகவும் கவனத்துடன் அவ்வப்போது மதிப்பீடு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் தேர்தல் வரும் 21-ம்தேதி நடத்தப்பட்டு முடிவுகள் 24-ம்தேதி வெளியிடப்படும்.
கடந்த வாரம் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சார்பாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மோட்டார் வாகன சட்டத்தில் விதிக்கப்பட்ட அபராதத்தொகை குறைக்கப்படும், விவசாய கடன் தள்ளுபடி, உயர் கல்விக்கு வட்டியில்லா கடன் உதவி உள்ளிட்டவை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.