கோடீஸ்வரர்களின் பட்டியல் கடந்த 2014 தேர்தல் பட்டியலை விட குறைவு.
New Delhi: நாட்டின் வர்த்தக தலைநகரமாக கருதப்படும் மும்பை அமைந்திருக்கும் மகாராஷ்டிர மாநிலம் இன்னும் 2 நாட்களில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. இந்த தேர்தலில் ஆயிரத்து ஏழு கோடீஸ்வர வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
2019 மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 3 ஆயிரத்து 112 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஆயிரத்து ஏழுபேர் கோடீஸ்வரர்கள்.
கட்சி வாரியாக, பாஜக நிறுத்தியிருக்கும் 162 பேரில் 155 வேட்பாளர்களும், காங்கிரசின் 147 பேரில் 126 பேரும், சிவசேனாவின் 124 பேரில் 116 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள்.
தேசியவாத காங்கிரசின் 116 வேட்பாளர்களில் 101 பேரும், மகாராஷ்டிர நிர்மாண் சேனாவின் 99 வேட்பாளர்களில் 52 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள் ஆவார்கள்.
இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 4.21 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடீஸ்வர வேட்பாளர்களின் எண்ணிக்கை கடந்த 2014-யை விட குறைவு ஆகும். அப்போது நடந்த தேர்தலில் 1095 கோடீஸ்வர வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
மகாராஷ்டிர தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்துள்ளன. எதிர்த்தரப்பில் காங்கிரசும் தேசியவாத காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன.