சரக்கு ரயில் ஏறி 16 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஹைலைட்ஸ்
- அவுரங்காபாத்தில் நடந்த ரயில் விபத்தில் சிக்கி 16 தொழிலாளர்கள் உயிரிழப்பு
- தொழிலாளர்கள் பலியானது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- சம்பவம் எப்படி நடந்தது என்பதுபற்றி சக தொழிலாளர் விவரித்துள்ளார்.
Aurangabad: மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் சரக்கு ரயில் மோதி 16 வெளிமாநில தொழிலாளர்கள் நேற்று காலையில் உயிரிழந்தனர். அவர்களுடன் இருந்து உயிர் தப்பிய மற்றொரு தொழிலாளி, நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தின் ஜால்னா நகரில், உருக்கு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.
இதற்காக அவர்கள் ரயில் மார்க்கத்தை தேர்வு செய்து நடக்க ஆரம்பித்தார்கள். சொந்த ஊர் அவுரங்காபாத்தில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இந்த நிலையில் சுமார் 30 கிலோமீட்டர் நடந்த அவர்கள் கர்மாட் என்ற இடத்தின் அருகே ஓய்வெடுக்கத் தொடங்கினர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது மோதியதில் 16 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் உயிர் பிழைத்த சிவமான் சிங் என்ற தொழிலாளி கூறியதாவது-
விபத்து கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டது. அதற்கு முன்பாக நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்துதான் சாப்பிட்டோம். என்னை தவிர்த்து மற்றவர்கள் வேகமாக நடந்து சென்றனர். நான் அவர்களை பின் தொடர்ந்தேன்.
அதிக தூரம் நடந்ததால் மிகுந்த களைப்புடன் இருந்தோம். மற்றவர்களை விட நான் சற்று தூரமாகத்தான் இரவு படுத்திருந்தேன். திடீரென ரயில் வரும் சத்தம் கேட்டது. நான் எழுந்து மற்றவர்களை எச்சரிக்கை செய்வதற்கு முன்பாக, ரயில் அவர்கள் மீது ஏறிச் சென்று விட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். சரக்கு ரயில் ஏறி 16 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.