மதுங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Mumbai: மகாராஷ்டிராவில் அம்பேத்கரின் இல்லத்தை சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை செய்துள்ளார்.
மறைந்த சட்ட மாமேதை அம்பேத்கரின் இல்லம் மும்பையின் தாதரில் அமைந்துள்ளது. இந்த இல்லத்தை ராஜ்குரு என்று அழைப்பார்கள். இந்த நிலையில், நேற்றிரவு வந்த 2 நபர்கள் இங்குள்ள சிசிடிவி மற்றும் வீட்டின் வளாகத்தில் அமைக்கப்பட்ட பூந்தொட்டிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர்.
மற்றொரு சிசிடிவி பதிவில் ஒருவர் பூஞ்சட்டிகளை போட்டு உடைக்கிறார். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'அம்பேத்கரின் வீடு அவரை பின்பற்றுபவர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் புனிதமான இடமாகும். இதை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன்' என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மதுங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாதரின் இந்து காலணியில் அமைந்துள்ள அம்பேத்கரின் வீடு, அருங்காட்சியகமாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கு அவர் பயன்படுத்திய புத்தகங்கள், ஓவியங்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவை பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.