மகாராஷ்டிரா ஆளுநர் தலைமையில் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித்பவார் பதவியேற்றனர்.
New Delhi: மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்ததற்கு எதிரான வழக்கில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 54 எம்எல்ஏக்கள் உட்பட 170 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக அளித்த கடிதத்தின் அடிப்படையிலே ஆளுநர் தேவேந்திர ஃபட்னாவிஸை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததாக மத்திய அரசு தரப்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் எதிர்பாராத விதமாக ஆட்சியமைத்த பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸூக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5.47 மணி அளவில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பபெறப்பட்டு, காலை 7.50 மணி அளவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
இதுதொடர்பாக அஜித்பவார் கடந்த 22ம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 54 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்ததன் பேரில் பாஜக தங்களது ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தது. இதைத்தொடர்ந்தே, ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கடிதத்தில், முன்னதாக எங்களால் ஆட்சி அமைக்க முடியாமல் இருந்தது. நிலையான ஆட்சி அமைய நாங்கள் தேவேந்திர ஃபட்னாவிஸூக்கு ஆதரவு அளிக்க விரும்புகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார். ஆளுநர் 170 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதை அறிந்த பின்னரே பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார் என்று கூறினார்.
முன்னதாக, மகாராஷ்டிர அரசுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளான என்.வி.ரமணா, அஷோக் பூஷண் மற்றும் சஞ்சிவ் கண்ணா ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில், நீதிமன்றம், இன்று காலை 10:30 மணிக்குள், எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதங்களை
சமர்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கறார் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடும்படி, சிவசேனா, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் வலியுறுத்தியது. காங்கிரஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஆளுநர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தேதியை கூட குறிப்பிடவில்லை என்று கூறினார். இதைத்தொடர்ந்து, நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.