This Article is From Nov 11, 2019

பாஜகவை கவிழ்க்கும் சிவசேனா; தயாராகும் ’பிளான் பி’! மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பம்!

சரத்பவார் தலைமயிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போதைய நிலைமையை உற்றுநோக்கி கவனித்து வருகிறது. 54 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அக்கட்சி ஆட்சி அமைக்க முயற்சிக்கும் என மாலிக் தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் மாற்று ஆட்சியை அமைக்க முயற்சிக்கும் என நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

Mumbai:

மகாராஷ்டிராவில் இரண்டாவது முறையாக முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜகவுக்கு ஆதரவு தர மாட்டோம் என அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். 

மேலும், அவர் கூறும்போது, பாஜகவை வீழ்த்த அதற்கு எதிராக சிவசேனா வாக்களிக்குமா என்பதை பார்த்து முடிவெடுப்போம் என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக - சிவசேனா கூட்டணி பெரும்பான்மையை கைப்பற்றிய நிலையிலும் ஆட்சி அமைப்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பாஜகவை ஆட்சி அமைக்க வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். 

288 இடங்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 105 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளதால் இந்த அழைப்பை ஆளுநர் விடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சரத்பவார் தலைமயிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தற்போதைய நிலைமையை உற்றுநோக்கி கவனித்து வருகிறது. 54 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அக்கட்சி ஆட்சி அமைக்க முயற்சிக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், பாஜகவிற்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும் அல்லது, அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும்., மேலும், அவையில் நாங்கள் பாஜகவுக்கு எதிராகவே வாக்களிப்போம் என்று அவர் கூறினார். 

இதனால், ஆட்சி அமைக்க முடியாத பட்சத்தில் மாநில மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் மாற்று ஆட்சியை அமைக்க முயற்சிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, வரும் நவ.12ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். 

இதனிடையே, குதிரை பேரத்தில் இருந்து தங்கள் எம்எல்ஏக்களை காக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவசேனா தங்களது எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில் தங்கவைத்துள்ளது. தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட ஆதித்யா தாக்கரே எம்எல்ஏக்களுடன் விடுதியில் தங்கியுள்ளார். 

தொடர்ந்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக முக்கிய குழு உறுப்பினர்கள் இன்று சந்தித்து ஆலோசிக்க உள்ளனர். 

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனா ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. இதில் பாரதிய ஜனதா 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றி கண்டன.

(with inputs from ANI)

.