கூட்டணியாக தேர்தலை சந்திக்க உள்ளோம், விரைவில் அறிவிப்போம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Mumbai: மகாராஷ்டிராவில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக - சிவசேனா இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக சிவசேனா கட்சி அறிவித்தது. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் இரு கட்சிகள் இடையே இழுபறி நீடித்து வருகிறது.
இதனிடையே, தொகுதி பங்கீடு குறித்து கிடைத்த தகவலின்படி, மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக 144 இடங்களிலும், சிவசேனா 126 இடங்களிலும் போட்டியிடும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற இடங்கள் சிறிய கட்சிகளுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
மேலும், 126 இடங்களைத் தவிர்த்து துணை முதல்வர் பொறுப்பும் சிவசேனா கட்சிக்கு வழங்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக உயர்மட்ட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
முன்னதாக பாதிக்கு பாதி தொகுதிகளில் சிவசேனா போட்டியிடும் என தகவல்கள் பரவலாக வெளியானது. இறுதியாக 126 தொகுதிகளில் போட்டியிடும் முடிவுக்கு அக்கட்சி வந்துள்ளது. கடந்த 2014 சட்டமன்ற தேர்தலின்போது இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டன. தேர்தலுக்கு பின்னர் பாஜக அரசுக்கு சிவசேனா ஆதரவு அளித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 21-ம்தேதி நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் 24 -ம்தேதி வெளியாகின்றன.
With inputs from ANI