This Article is From Oct 29, 2019

‘’அதிகாரத்தின் ரிமோட் கன்ட்ரோல் எங்களிடம்தான் உள்ளது’’ – பாஜகவை எச்சரிக்கும் சிவசேனா!

மகாராஷ்டிர அரசில் 50 சதவீத பங்கை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் இதனை எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும் என்றும் பாஜகவிடம் சிவசேனா டிமாண்ட் செய்துள்ளது.

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது.

Mumbai:

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகாரத்தின் ரிமோட் கன்ட்டோல் என்ற கட்டுப்பாடு முழுவதும் தங்களிடத்தில்தான் உள்ளது என்று பாஜகவை சிவசேனா எச்சரிக்கை செய்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் கூறப்பட்டுள்ளதாவது-

2014-ல் சிவசேனா 63 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது 56 தொகுதிகள் கிடைத்துள்ளன. இருப்பினும் மகாராஷ்டிராவில் அதிகாரத்தின் கட்டுப்பாடு முழுவதும் சிவசேனாவிடம்தான் இருக்கிறது. பாஜகவை நம்பித்தான் சிவசேனா இருக்கிறது என்ற மாயத்தோற்றத்தை தேர்தல் முடிவுகள் தகர்த்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2014-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது பாஜகவும், சிவசேனாவும் தனித்துப் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பாஜகவுக்கு 105 இடங்கள் கிடைத்தன. இருப்பினும், பெரும்பான்மைக்கு 146 இடங்கள் தேவை என்ற நிலையில் சிவசேனாவின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது.

2019 தேர்தலில் கூட்டணி அமைத்து பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்ற நிலையில், அதிரடி நடவக்கையை சிவசேனா மேற்கொண்டுள்ளது.

அதாவது, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே – பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மகாராஷ்டிர அரசில் பாதி பொறுப்புகள் சிவசேனாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், இதனை எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் தற்போது சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

இருப்பனும் இதற்கு பாஜக தரப்பில் தற்போது வரை பதில் அளிக்கப்படவில்லை. 30-ம்தேதி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றைய தினம் மகாராஷ்டிரா வரும் அமித் ஷா, உத்தவ் தாக்கரேயுடன் பேசி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

.