Maharashtra Election Results: சஞ்சய் ராவத் தன்னை சந்தித்து சென்ற பின் செய்தியாளர்களை சந்தித்தார் சரத்பவார்.
Mumbai: மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அரசு அமைவதற்கான சாத்தியம் மட்டுமே உள்ளது. வேறு வழியே இல்லை. அதனால், மாநிலத்தை அரசியலமைப்பு நெருக்கடிக்கு உட்படுத்தாமல், இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க முன்வர வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த அக்.24ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, இன்று இரண்டாவது முறையாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்பவார், பாஜக - சிவசேனா கூட்டணி கடந்த 25 வருடங்களாக இருந்து வருகிறது. அவர்கள் புதிய ஆட்சியை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சரத்பவாருடனான சந்திப்பை தொடர்ந்து, சிவசேனா அமைச்சர்கள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸை சந்தித்து ஆலோசனை நடத்தினர் என பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத், தங்களுக்கு 170 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 288 உறுப்புனர்களில், 145 பெரும்பான்மைக்கு தேவையென்ற நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்களை சேர்க்காமல் எப்படி அது சாத்தியமாகும்? நானும், சஞ்சய் ராவத்திடம் 170 பேர் ஆதரவு எப்படி கிடைத்தது என கேட்க வேண்டும் என்றார்.
காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை மக்கள் எதிர்கட்சி வரிசையிலே அமரும் படி வலியுறுத்தியுள்ளனர். எங்களுக்கு 54 இடங்களே உள்ளது. இதனை வைத்து உங்களால் ஆட்சி அமைக்க முடியாது என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியாவையும், சிவசேனா தரப்பில் சஞ்சய் ராவத்தையும் சரத்பவார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. சிவசேனாவை வைத்து பாஜகவை ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்கும் செயலாக தெரிந்தது. எனினும், சோனியா காந்தியுடன் திங்களன்று நடந்த சந்திப்பை தொடர்ந்து, சிவசேனாவுக்கு ஆதரவு தெரிவிக்க காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக தெரிகிறது.
மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது. தேசியவாத காங்கிரஸ் தேர்தலில், 54 இடங்களையும், காங்கிரஸ், 44 இடங்களையும் வென்றன.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதற்கான இறுதி கெடு நெருங்கும் நிலையில், இன்று முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் தலைவர் மோகன் பகவத்தை சந்திக்க நாக்பூர் சென்றுள்ளார்.