This Article is From Nov 02, 2019

குடியரசுத்தலைவர் உங்கள் பாக்கெட்டில் இருக்கிறாரா? பாஜகவை எச்சரிக்கும் சிவசேனா!!

Maharashtra Election Results 2019: மகாராஷ்டிராவில் நவ.7-க்குள் ஆட்சியமைக்காவிட்டால் குடியரசுத்தலைவர் ஆட்சி அமையும் என பாஜகவின் மூத்த தலைவர் சுதிர் முங்கன்திவார் தெரிவித்திருந்தார்.

50:50 அதிகாரப் பகிர்வு கோரிக்கையை சிவசேனா முன்வைத்து வருகிறது.

Mumbai:

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜகவுடன் அதிகார மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், 'குடியரசுத்தலைவர் ஆட்சி அமலாகும் என எச்சரிப்பதா' என சிவசேனா இன்று மேலும் கடுமையாக பாஜகவை கடிந்துள்ளது. 

பாஜகவின் மூத்த தலைவரும் நிதியமைச்சருமான சுதிர் முங்கன்திவார், பாஜக மற்றும் சிவசேனா இடையே ஆட்சி அமைப்பது தொடர்பாக இழுபறி நீடித்தால் குடியரசுத்தலைவர் ஆட்சி அமையும் என நேற்றைய தினம் கூறியிருந்தார்.

இந்நிலையில் சுதிரின் இந்த கருத்து, மாநிலத்தையும், மக்களின் ஆணையையும் அவமதிக்கும் செயலாகும். ஆட்சி அமைப்தற்கான இந்த காத்திருப்பு விரைவில் முடிவடையும் என சிவசேனா எச்சரித்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 21தேதி வெளியான நிலையில், 8 நாட்களை கடந்தும் இன்னும் மாநிலத்தில் ஆட்சி அமைக்காமல் இருக்கும் நிலையில் நவ.7-க்குள் ஆட்சியமைக்காவிட்டால் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என பாஜகவின் சுதிர் முங்கன்திவார் கூறியிருந்தார். 

இந்நிலையில், சிவசேனாவில் சஞ்சய் ராவத் கூறும்போது, விரைவில் இந்த காத்திருப்பை சிவசேனா முடிவுக்கு கொண்டுவரும். இந்த எச்சரிக்கையும் விடுத்த அவர்களால் ஆட்சி அமைக்க முடிந்ததா? என்று அவர் கேள்வி எழுப்பினார். 

இதுதொடர்பாக சிவசேனாவின் அதிகார்ப்பூர்வ நாளேடான சாம்னாவில், 'குடியரசுத் தலைவர் உங்கள் பாக்கெட்டில் இருக்கிறாரா? மகாராஷ்டிராவுக்கு அவமரியாதை' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அதில், பாஜக கட்டுப்பாட்டில் குடியரசுத் தலைவர் இருக்கிறாரா அல்லது குடியரசுத் தலைவரின் முத்திரை பாஜக அலுவலகத்தில் இருக்கிறதா? ஆட்சி அமைக்க முடியாவிட்டால் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த? என சரமாரி கேள்விகளுடன் அந்த கட்டுரை நீள்கிறது.  

50 சதவீத அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தை சிவசேனா முன் வைத்துள்ளது. “லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 50:50 அதிகாரப் பகிர்வுக்கு அமித்ஷா ஒப்புக் கொண்டதாக சிவசேனா கட்சி கூறிவருகிறது. 

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா, மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்தான், முதல்வராக தொடர வேண்டும் என்று கருதுகிறார்கள். சிவசேனாவின் நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் சரத் பவார், ‘சிவசேனாவின் நிபந்தனையில் எந்த தவறும் இல்லை,' என்றுள்ளார். 

மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது. தேசியவாத காங்கிரஸ் தேர்தலில், 54 இடங்களையும், காங்கிரஸ், 44 இடங்களையும் வென்றன. 

மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தொகுதி பங்கீடு தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினருடன் மும்பையில் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது 50 சதவீத அதிகாரப் பங்கீடு திட்டத்தை சிவசேனை முன்வைத்தது உண்மைதான். ஆனால் அந்த திட்டத்தை பாரதீய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை என மகாராஷ்டிர மாநில முதல்வர் பட்னாவிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

(With inputs from PTI) 

.