Election Results 2019: சிவசேனாவின் நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது
ஹைலைட்ஸ்
- 56 சிவசேனா எம்எல்ஏ-க்கள் சந்திப்பு, தாக்கரே இல்லத்தில் நடந்தது
- 50:50 ஃபார்முலாவை பாஜக ஏற்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தல்
- பாஜக - சிவசேனாவை எதிர்த்து காங், தேசியவாத காங் களம் கண்டன
Mumbai: மகாராஷ்டிராவில் (Maharashtra) நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாஜக (BJP) - சிவசேனா (Shiv Sena) கூட்டணி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்நிலையில், இருவரும் சேர்ந்து ஆட்சியமைப்பதில் தற்போது சிக்கல் உருவாகியுள்ளது. பெரும்பான்மை பெற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. சிவசேனா சார்பில் சட்டமன்றத் தேர்தலில் வென்ற 56 சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் கட்சியின் நிபந்தனைகளுக்கு பாஜக, எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். அதிகாரத்தில் இருவருக்கும் சரிபாதி பங்கு என்கிற சிவசேனாவின் கோரிக்கையைத்தான், அந்தக் கட்சி எழுத்துப்பூர்வமாக எதிர்பார்க்கிறது.
“லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 50: 50 அதிகாரப் பகிர்வுக்கு அமித்ஷா ஒப்புக் கொண்டார். அதன் அடிப்படையில் இரு கூட்டணிக் கட்சிகளுக்கும் 2.5 ஆண்டுகள் ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டும். சிவசேனா சார்பிலும் முதல்வர் பதவி வகிக்க வேண்டும். உத்தவ்ஜி இது குறித்து எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெற வேண்டும்,” என்று சிவசேனா எம்.எல்.ஏ, பிரதாப் சர்நாயக் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பைத் தொடர்ந்து தகவல் தெரிவித்துள்ளார்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, இந்த முறை தேர்தலில் நின்று வெற்றியடைந்துள்ளார். அவர் சிவசேனா சார்பில் முதல்வராக பதவி வகிக்க வேண்டும் என்று அக்கட்சி எதிர்பார்க்கிறது.
வரும் அக்டோபர் 30 ஆம் தேதி, மகாராஷ்டிர பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.
மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் வந்ததில் இருந்து, 50: 50 ஃபார்முலாவை செயல்படுத்தச் சொல்லி சிவசேனா, பாஜக-வுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா, மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்தான், முதல்வராக தொடர வேண்டும் என்று கருதுகிறார்கள்.
Maharashtra Election Result 2019: Aaditya Thackeray, தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்துள்ளார்.
சிவசேனாவின் நிலைப்பாட்டுக்கு எதிர்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் சரத் பவார், ‘சிவசேனாவின் நிபந்தனையில் எந்த தவறும் இல்லை,' என்றுள்ளார்.
மகாராஷ்டிர தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி, மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 161-ஐக் கைப்பற்றின. பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது.
தேசியவாத காங்கிரஸ் தேர்தலில், 54 இடங்களையும், காங்கிரஸ், 44 இடங்களையும் வென்றன. இந்த இரு கட்சிகளும் சிவசேனாவுடன் கூட்டணி வைக்க முன்வரவில்லை.
With input from PTI, ANI