This Article is From Oct 15, 2019

மகாராஷ்டிரா தேர்தல்: ரஃபேல் இருந்திருந்தால்..இங்கிருந்தே தகர்த்திருக்கலாம்: ராஜ்நாத் சிங்

போர் விமானங்கள் என்பது தற்காப்புக்காக மட்டுமே, ஆக்கிரமிப்புக்காக அல்ல என்று ராஜ்நாத் சிங் திட்டவட்டாமக கூறினார்.

மகாராஷ்டிரா தேர்தல்: ரஃபேல் இருந்திருந்தால்..இங்கிருந்தே தகர்த்திருக்கலாம்: ராஜ்நாத் சிங்

ரஃபேல் போர் விமானத்திற்கு நடத்திய பூஜைகளுக்காக காங்கிரசால் ராஜ்நாத் சிங் விமர்சிக்கப்பட்டார்.

Thane:

இந்தியாவிடம் முன்னதாகவே ரஃபேல் விமானம் இருந்திருந்தால், இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலக்கேட் பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்க தேவை இருந்திருக்காது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவின் தானே பகுதியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், நம்மிடம் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால், பாலக்கேட் பகுதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியிருக்க தேவையில்லை. இந்தியாவில் இருந்தபடியே பாலக்கோட்டை தகர்த்திருக்கலாம் என்று கூறினார். 

போர் விமானங்கள் என்பது தற்காப்புக்காக மட்டுமே, ஆக்கிரமிப்புக்காக அல்ல. எனது நம்பிக்கைக்கு ஏற்ப நான் செயல்பட்டேன். கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் போன்ற பிற சமூகங்கள் கூட ஆமென், ஓம்கர் போன்ற சொற்களால் வழிபடுகின்றன. 

நான் 'சாஸ்திர பூஜை' நிகழ்த்தும்போது கூட, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், புத்தர்கள் போன்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என்றார். 

மேலும், தனது ரஃபேல் பயணத்தின் போது, விமான கேப்டனை சூப்பர்சோனிக் வேகத்தில் பறக்கச் சொன்னேன். நானும் பாரிஸைச் சேர்ந்த கேப்டனும் மட்டுமே விமானத்தின் உள்ளே இருந்தோம். அதனால், சூப்பர்சோனிக் வேகத்தை அனுபவிக்க விரும்பினேன்," என்று அவர் கூறினார்.

சூப்பர்சோனிக் வேகத்தை பிரதமர் நரேந்திர மோடியின் நிர்வாகத்துடன் இணைத்து பேசிய அவர், "காங்கிரசும், தேசியவாத காங்கிரசும், சூப்பர்சோனிக் வேகத்தில் கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எங்கள் அரசாங்கம் சூப்பர்சோனிக் வேகத்தில் முன்னேறி செல்கிறது" என்று அவர் கூறினார். 

முன்னதாக, பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரஃபேல் போர் விமானம், கடந்த (அக்.8ம் தேதி) பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. விஜயதசமி தினமான அன்று தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட போர் விமானத்திற்கு ராஜ்நாத் சிங் பூஜைகள் செய்தார். 

மேலும், குங்குமத்தில் 'ஓம்' என்று விமானத்தில் எழுதிய அவர், மலர்கள் தூவியும் தேங்காய் உடைத்தும் வழிபட்டார். பின்னர் எலுமிச்சை பழங்கள் வைக்கப்பட்டு அதன் மீது போர் விமானம் ஏற்றப்பட்டது. 

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத நிகழ்ச்சியான விஜயதசமியும், ரஃபேல் போர் விமானமும் ஒன்றுக்கொன்று பொருந்தாது. நாம் அனைவரும் கொண்டாடும் பண்டிகையை போர் விமானத்துடன் ஏன் இணைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் பலர் கேள்வி எழுப்பினர். 

.