This Article is From Nov 22, 2019

மகாராஷ்டிராவின் முதல்வராகிறார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே! சரத் பவார் தகவல்!!

சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சரத் பவார். 

மகாராஷ்டிராவின் முதல்வராகிறார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே! சரத் பவார் தகவல்!!

நாளை 3 கட்சி தலைவர்களும் கவர்னரை சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mumbai:

மகாராஷ்டிர முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பேற்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட எதிர்பார்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

எனினும், சிவசேனா 5 வருடம் முதல்வர் பதவியில் நீடிக்குமா அல்லது தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் சுழற்சி முறையில் முதல்வர் பதவி என ஒப்பந்தம் செய்துள்ளதா என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், சுழற்சி முறை இல்லாமல் உத்தவ் தாக்கரேவே 5 வருடம் முதல்வராக நீடிப்பார் என்பதில் சிவசேனா ஆரம்பம் முதலே உறுதியாக இருந்து வருகிறது. 

இந்நிலையில், நேற்று மாலை டெல்லியில் இருந்து திரும்பிய சரத்பவாரை நள்ளிரவில் உத்தவ் தாக்கரேவும் அவரது மகன் ஆதித்யா தாக்கரேவும் அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்தனர். இதைத்தொடர்ந்து, இன்று இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிர அரசை உத்தவ் தாக்கரே வழி நடத்துவார் என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். 

தேவேந்திர ஃபட்னாவிஸின் அரசின் தவறான செயலை முடிவுக்கு கொண்டு வருவதற்கே சிவசேனாவுடன் இணைய முடிவு செய்துள்ளதாகவும், 'மகாராஷ்டிராவை நாங்கள் பாதிப்படைய விட மாட்டோம்' என முன்னாள் முதல்வர் பிரித்விராஜ் சவான் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, மகாராஷ்டிராவில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராத காரணத்தினால், குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை கைப்பற்றியது. 

இதில், பெரும்பான்மை கொண்ட கட்சியான பாஜகவை முதலில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். எனினும், அழைப்பை ஏற்க பாஜக மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, முதல்வர் பதவியையும் தேவேந்திர ஃபட்நாவிஸ் ராஜினாமா செய்தார். 

பாஜகவும் - சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும், அதிகாரப்பகிர்வு மோதல் காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. மக்களவை தேர்தலுக்கு முன்பு பாஜக தலைவர் அமித் ஷா சிவசேனாவுடம் கொண்ட ஒப்பந்தத்தின் படி, 50:50 அதிகாரப்பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி உள்ளிட்ட அம்சங்களை சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தியது. 

எனினும், பாஜக இதனை ஏற்காமல் பிடிவாதமாக இருந்து வந்தது. மேலும், அதிக இடங்களை கைப்பற்றிய தங்கள் கட்சி எதற்காக சரிபாதியாக அதிகாரத்தை பகிர வேண்டும் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி மறுப்பு தெரிவித்து வந்தது. 

இதைத்தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டது. இதற்காக தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதையடுத்து, சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சரத் பவார். 

.