மகாராஷ்டிர அரசுக்கு எதிரான வழக்கில் நாளை உத்தரவு கொடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
New Delhi: Maharashtra Coup - மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்தடுத்து அரசியல் பரபரப்பு நீடித்து வரும் நிலையில், அந்த விவகாரம் பற்றி காங்கிரஸின் ராகுல் காந்தி (Rahul Gandhi), நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
மகாராஷ்டிராவில் எதிர்பாராத விதமாக ஆட்சியமைத்த பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து நாளை வழக்கில் உத்தரவு கொடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில், மகாராஷ்டிராவில் அமைந்துள்ள பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில், “ஜனநாயகப் படுகொலையை நிறுத்துங்கள்,” என்று கோஷம் எழுப்பப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.
மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5.47 மணி அளவில் அமலில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டு, காலை 7.50 மணி அளவில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
இதுதொடர்பாக அஜித்பவார் கடந்த 22ம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 54 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்ததன் பேரில் பாஜக தங்களது ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தது. இதைத்தொடர்ந்தே, ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் எனத் தெரிகிறது.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 இடங்களில், பாஜக 105 தொகுதிகளைக் கைப்பற்றியது. சிவசேனா, 56 இடங்களைப் பிடித்தது. சேனாவைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ், 54 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ், 44 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா, ஆட்சியமைக்க இருந்த நிலையில், ‘ராஜதந்திரத்தால்' பாஜக தலைமையில் மீண்டும் ஆட்சி மலர்ந்துள்ளது.
இருப்பினும் ஒரு சில என்சிபி எம்.எல்.ஏ-க்களைத் தவிர மற்ற அனைவரும் சரத் பவாருடனேயே இருப்பதாக தெரிகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருப்பதனால், அந்தக் கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக மற்றவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து லோக்சபாவில் பேசிய ராகுல், “மகாராஷ்டிராவில் ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் கேள்வி கேட்பது முரணாக உள்ளது. நான் அப்படி அவர்களிடம் எந்த கேள்வியும் கேட்கப் போவதில்லை,” என்றார் கொதிப்புடன்.
With input from ANI