இன்று மதியம் உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது.
New Delhi: #MaharashtraPolitics - மகாராஷ்டிராவில் (Maharashtra) எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸும் (NCP) பாஜக-வும் (BJP) கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. ஆட்சியமைப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர், சரத் பவார் (Sharad Pawar), சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அமையும் என்று உத்தரவாதம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே (Supriya Sule), மிகவும் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.
அதில், “கட்சியும் குடும்பமும் உடைந்துவிட்டது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை சுப்ரியா சுலேவின் உறவினரும் சரத் பவாரின் மருமகனுமான அஜித் பவார், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பொறுப்பேற்றார். பாஜக-வின் தேவேந்திர ஃபட்னாவிஸ், மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
நேற்றிரவு வரை அஜித் பவார், மூன்று கட்சிகளுக்கு இடையில் நடந்த கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் முழு வீச்சில் கலந்து கொண்டார். நேற்றைய சந்திப்பைத் தொடர்ந்து சரத் பவார், சிவசேனாவின் உத்தவ் தாக்கரேதான் மகாராஷ்டிராவின் முதல்வராக இருப்பார் என்று தெரிவித்தார்.
இன்று மதியம் உத்தவ் தாக்கரேவும் சரத் பவாரும் இணைந்து செய்தியாளர்களை சந்திப்பதாக இருந்தது.
தேசியவாத காங்கிரஸ் தரப்பில் இருக்கும் அனைத்து 54 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக, ஆளுநரிடம் கூறியுள்ளது. அதை மறுக்கும் சரத் பவார், “அஜித் பவார், மகராஷ்டிராவில் ஆட்சியமைக்க பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தது அவருடைய சொந்த விருப்பமாகும். இதற்கும் தேசியவாத காங்கிரஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த முடிவை நாங்கள் ஏற்கவில்லை,” என்று ட்விட்டர் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.
அஜித் பவார் தங்கள் முதுகில் குத்திவிட்டதாக சொல்லும் சிவசேனா, “நேற்றிரவு 9 மணி வரை அஜித் பவார் எங்களுடன் அமர்ந்து பல்வேறு விஷயங்கள் குறித்தி விவாதம் செய்து வந்தார். திடீரென்று அவரைக் காணவில்லை. சந்திப்புகளின் போதும் எங்கள் கண்களைப் பார்த்து அவர் பேசவில்லை. என்னமோ தவறாக நடக்கிறது என்று எங்களால் யூகிக்க முடிந்தது. அவரை போன் மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை,” என்று ஆதங்கப்பட்டது.