Read in English
This Article is From Nov 07, 2019

பாஜக சதி: எம்எல்ஏக்களை நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்க சிவசேனா திட்டம்?

மும்பையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து சிவசேனாவை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களையும் சந்திக்க உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்திக்கிறார்.

Advertisement
இந்தியா Edited by

சிவசேனாவின் கொள்கை குறித்து எம்எல்ஏக்களுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை மேற்கொண்டு அவர்களுக்கு வழிகாட்டுவார் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

New Delhi:

சிவசேனா எம்எல்ஏக்கள் கட்சிக்கு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள், அவர்களை சொகுசு விடுதிகளில் தங்க வைக்க வேண்டிய தேவையில்லை என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

பாஜகவின் குதிரைப்பேரத்தை தவிர்க்க சிவசேனா எம்எல்ஏக்களை நட்சத்திர சொகுசு விடுதிகளில் தங்க வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

மேலும், எங்கள் எம்எல்ஏக்கள் கட்சிக்கு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறார்கள். இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் முதலில் தங்கள் எம்எல்ஏக்களைப் பற்றி கவலைப்பட வேண்டும். சிவசேனா எம்எல்ஏக்கள் அருகில் வரும் துணிச்சல் யாருக்கும் கிடையாது என்று அவர் கூறினார்.

சிவசேனா மறுப்பு தெரிவித்த போதிலும், மும்பையில் உள்ள சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவின் வீட்டின் அருகிலே உள்ள நட்சத்திர சொகுசு விடுதியில் சிவசேனா எம்எல்ஏக்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக என்டிடிவிக்கு தகவல்கள் தெரிவித்துள்ளன. 

Advertisement

மேலும், உத்தவ் தாக்கரேவுடனான சந்திப்பு நிறைவு பெற்றதும், எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் தங்க வைகப்படுவார்கள் என்று தெரிவிக்கின்றன. எம்எல்ஏக்களுடனான இந்த சந்திப்பின் போது, சிவசேனாவின் கொள்கை குறித்து உத்தவ் தாக்கரே அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அவர்களுக்கு வழிகாட்டுவார் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார். 

இதனிடையே, முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்திக்கிறார். மகாராஷ்டிராவில் நாளைக்குள் ஆட்சி அமையவில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. 

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா - சிவசேனா ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. இதில் பாரதிய ஜனதா 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின.

காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றி கண்டன. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற சூழலில் 161 இடங்களை வென்றுள்ள பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி எளிதில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அந்தக்கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

Advertisement

தேர்தல் முடிவுகள் வெளியாகி 14 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் ஆட்சி அமைப்பது? ஆட்சியில் யாருக்கு என்ன பங்கு? என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே உள்ளது. சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. 

Advertisement