This Article is From Nov 15, 2019

மகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு எங்களது ஆட்சிதான் -பாஜகவை மீண்டும் சீண்டிய சிவசேனா!

எந்தக் கட்சியும் ஆட்சியமைக்கு முன்வராத நிலையில் மகாராஷ்டிராவில் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டு வருகிறது.

மகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு எங்களது ஆட்சிதான் -பாஜகவை மீண்டும் சீண்டிய சிவசேனா!

தேசியவாத காங்கிரஸ் மற்றும், காங்கிரசின் அனுபவத்தால் சிவசேனா பலன் பெறும் என்கிறார் சஞ்சய் ராவத்.

Mumbai:

மகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனாதான் ஆட்சியில் இருக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் கூறியுள்ளார். 

எந்தக் கட்சியும் முன்வராத நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறையில் இருந்து வருகிறது. மாநிலத்தில் பாஜக தனித்து விடப்பட்ட சூழலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் முயற்சியில் சிவசேனா ஈடுபட்டுள்ளது. 

இருப்பினும், முதல்வர் பதவி யாருக்கு செல்லும் என்பது முக்கிய கேள்வியாக எழுந்துள்ளது. இந்த நிலையில், முதல்வர் பதவி குறித்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், 'காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மாநில மக்களின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்கப்படும். எங்களுடன் அனுபவம் மிக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இணைந்துள்ளனர். அவர்களது அனுபவம் எங்களுக்கு பலன் தரும்' என்றார். 

சுழற்சி முறையில் முதல்வர் பதவி மாற்றி அமைக்கப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த சஞ்சய் ராவத், 'மகாராஷ்டிராவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனாவை சேர்ந்தவர்தான் முதல்வராக இருப்பார். யார் என்ன முயற்சி செய்தாலும் மகாராஷ்டிராவில் சிறப்பான தலைமையை சிவசேனா வழங்கும். 

மகாராஷ்டிர மக்களுக்கும் எங்களுக்குமான உறவு நிரந்தரமானது. கடந்த 50 ஆண்டுகளாக எங்களது கட்சி உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது. அதிகாரப்பகிர்வு குறித்து யாரும் கவலை கொள்ளத் தேவையில்லை. உத்தவ் தாக்கரே அந்த விவகாரத்தில் நல்ல முடிவை எடுப்பார்.' என்று கூறினார். 

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு 145 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. 

.