பாஜகவுடன் அதிகாரப்பகிர்வு மோதல் நீடித்ததால் கூட்டணி முடிவுக்கு வந்தது.
Mumbai: சரத்பவாரின் இணக்கமற்ற அறிக்கைகளைப் பொருட்படுத்தாமல், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் தீவிரமாக இருப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செவ்வாயன்று செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும்போது, சரத்பவார் குறித்தும், எங்கள் கூட்டணி குறித்தும் நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி விரைவில் அமையும். அது நிச்சயம் நிலையான ஆட்சியாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்பவார், மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தோம், ஆனால் ஆட்சி அமைப்பது தொடர்பாக விவாதிக்கவில்லை. 'எந்த கட்சியுடனும் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் ஆலோசிக்கவில்லை. அதற்கு மேலும் சில விஷயங்களில் தெளிவும் ஆலோசனையும் தேவப்படுகிறது' என்றார்.
சரத்பவாரின் இந்த குழப்பமான பதிலால் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் சரியாக அமையவில்லை என ஊகங்கள் கிளம்பின. இதனிடையே, சஞ்சய் ராவத்திடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, சரத்பவார் கூறியதை புரிந்துக்கொள்ள 100 முறை பிறந்து வர வேண்டும் என்றார்.
எனினும், சிவசேனா ஆதரவாளர்கள் தேசியவாத காங்கிரஸ் பாஜக பக்கம் ஆதரவு தெரிவித்துவிட்டதாகவும், அதனால், கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிடிகொடுக்காமல் இருப்பதாகவும் கருதி வருகின்றனர்.
இதனிடையே, சஞ்சய் ராவத் கூறும்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. முதல்வர் பதவியை பொருத்தவரை 5 வருடங்களும் முழுமையாக எங்களுக்கு என்றால் மட்டுமே ஒபந்தம் என்றார் கண்டிப்பாக.
இதனிடையே, பாஜக மீண்டும் 50-50 ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தால், பாஜகவுடன் கூட்டணியை புதுப்பிப்பதில் சிவசேனாவுக்கு பெரும் மகிழ்ச்சி தான் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், பாஜக தேசியவாத காங்கிரஸை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதையும் சிவசேனா நன்கு அறிந்து வைத்துள்ளது.
மகாராஷ்டிர தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது. பெரும்பான்மைக்கு 145 இடம் தேவையென்ற நிலையில், பாஜக - சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை வகித்தது.
எனினும், 50:50 அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சுழற்சி முறையில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளில் சிவசேனா பிடிவாதமாக இருந்து வந்தது. தேர்தலுக்கு முன்பாகவே அமித்ஷாவுடன் இந்த கூட்டணி ஒப்பந்தங்கள் நடந்து முடிந்ததாக சிவசேனா கூறியது.
ஆனால், அது போன்ற எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என ஆரம்பம் முதலே பாஜக உறுதியாக கூறியது. இப்படி இரண்டு கட்சிகளுக்கும் இடையேவும் தொடர்ந்து, அதிகாரப்பகிர்வு மோதல் நீடித்ததால் கூட்டணி முடிவுக்கு வந்தது. மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சியும் அமல்படுத்தப்பட்டது.