உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து நவாப் மாலிக் ட்வீட்
New Delhi: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், 'உண்மை நிச்சயம் வெல்லும்' என தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் எதிர்பாராத அரசியல் திருப்பமாக ஆட்சியமைத்த பாஜகவுக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதற்கு இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினராக உள்ள எம்எல்ஏவை சபாநாயகராக தேர்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தை வரவேற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் தனது ட்வீட்டர் பதிவில், 'உண்மை நிச்சயம் வெல்லும்' என இந்தியில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சனிக்கிழமையன்று செய்தியாளர்களை சந்தித்த நவாப் மாலிக், 10- 11 எம்எல்ஏக்களை தவறாக வழிநடத்திய அஜித்பவார் சட்டவிரோதமாக பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளார். நிச்சயம் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைவார்கள் என கூறியிருந்தார்.