This Article is From Feb 29, 2020

கல்வியில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு!! மகாராஷ்டிர அரசு அறிவிப்பு!

Maharashtra reservation for Muslims: கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பாக பட்ஜெட் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளி வந்துள்ளது.

கல்வியில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்கிறது மகாராஷ்டிர அரசு.

ஹைலைட்ஸ்

  • என்.சி.பி. அமைச்சர் நவாப் மாலிக் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
  • இட ஒதுக்கீடு விவகாரத்தில் முந்தைய மாநில அரசு மீது மாலிக் குற்றச்சாட்டு
  • இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.
Mumbai:

கல்வியில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.  கல்வியில் இட ஒதுக்கீடு தொடர்பாக பட்ஜெட் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு வெளி வந்துள்ளது.

இது தொடர்பான சட்ட மசோதா விரைவில் மகாஷ்டிர சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். 

அமைச்சர் நவாப் மாலிக் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி செய்கின்றன. இந்த கூட்டணிக்கு மகாராஷ்டிரா விகாஸ் அகாதி என்று பெயரிடப்பட்டுள்ளது. 

இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட பின்னர் நவாப் மாலிக் அளித்த பேட்டியில், 'முந்தைய உத்தவ் தாக்கரேவின் சிவசேனா - பாஜக கூட்டணி அரசு முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும் பாஜகவால் நிறுத்தப்பட்டிருந்தது. 

இந்த சட்டமன்ற கூட்டத் தொடர் முடிவதற்கு முன்பாக நாங்கள் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி விடுவோம்.' என்றார். 

மகாராஷ்டிராவில் ஏற்கனவே 50 சதவீதத்திற்கும் அதிகமாக இட ஒதுக்கீடு உள்ளது. கடந்த ஆண்டு மராத்தியர்களுக்குக் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து சதவீத உயர்வு ஏற்பட்டது. தற்போது முஸ்லிம்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு என்பது ஏற்கனவே உள்ளதுடன் சேர்க்கப்படும். 

மகாராஷ்டிராவில் மராத்தியர்களுக்கு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முந்தைய மாநில அரசு முடிவு செய்திருந்தது. இதனை உறுதி செய்த மும்பை உயர் நீதிமன்றம் இட ஒதுக்கீடு சதவீதத்தை மட்டும் 16-லிருந்து 13-ஆக குறைத்தது. 

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மகாராஷ்டிராவில் இட ஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக் கூடாது. இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று சிறுபான்மைத்துறை அமைச்சர் நவாப் மாலிக் அறிவித்துள்ளார்.

இருப்பினும் நடைமுறைப்படுத்துவதில் அதிக சவால்களை சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு எதிர்கொள்ளும் என்பது யதார்த்தமாக உள்ளது. 

.