This Article is From Nov 12, 2019

ஆளுநர் அழைப்பு: ஆட்சி அமைக்கிறதா தேசியவாத காங்கிரஸ்? ஆதரவு அளிக்குமா சிவசேனா?

தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சியின் ஆலசோனை இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே ஆட்சி அமைப்பது தொடர்பாக சரத்பவாருடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். 

ஆளுநர் அழைப்பு: ஆட்சி அமைக்கிறதா தேசியவாத காங்கிரஸ்? ஆதரவு அளிக்குமா சிவசேனா?

3வது பெரும்பான்மை கொண்டுள்ள கட்சி என்ற அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷியாரி நேற்று மாலை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஆட்சி அமைக்க மேலும், 48 மணி நேரம் அவகாசம் கேட்ட சிவசேனாவுக்கு மறுப்பு தெரிவித்த ஆளுநர் 3வது பெரும்பான்மை கொண்டுள்ள கட்சி என்ற அடிப்படையில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இன்று இரவு 8.30 வரை கெடுவும் விதித்துள்ளார். 

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டணிக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், உரிய பதில் சொல்லாத சோனியா காரிய கமிட்டியில் ஆலோசனை நடத்திவிட்டு திரும்ப அழைப்பதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸூடன் கூட்டணி அமைப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்ற நிர்பந்தத்தை நிறைவேற்றும் வகையில், மத்திய அமைச்சர் பதவியையும் சிவசேனா ராஜினாமா செய்துள்ளது. 

தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சியின் ஆலசோனை இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே ஆட்சி அமைப்பது தொடர்பாக சரத்பவாருடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். 

இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் என்டிடிவியிடம் கூறும்போது, மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக வாய்ப்புகள் உள்ளன. எனெனில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது. சிவசேனாவின் துணை இல்லாமல் இரண்டு கட்சிகளுக்கும் சட்டப்பேரவைக்கு தேவையான பெரும்பான்மை கிடையாது.

எனினும், இரண்டு கட்சிகளும் குடியரசுத் தலைவர் ஆட்சி வரவேண்டாம் என்றும் நினைக்கின்றனர். அதனாலே ஆட்சி அமைப்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 

காங்கிரஸ் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதை நிராகரிக்கவில்லை, ஆனால் ஒரு சமரசமற்ற நிலையில் உள்ளது. அதனால், எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பிருத்விராஜ் சவுகான் இன்று மும்பைக்கு புறப்பட உள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர். 

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கடிதத்தை ஒப்படைக்க சிவசேனா தவறிய நிலையில், மேலும், 3 நாட்கள் அவகாசம் வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. எனினும் அதனை ஏற்க மறுத்த ஆளுநர் தேசியவாத காங்கிரஸூக்கு அழைப்பு விடுத்தார். 

நீண்ட நாட்கள் எதிரியான சிவசேனாவையும், காங்கிரஸையும் இணைக்கும் முயற்சியில் சரத்பவார் தீவிரமாக முயற்சித்து வருகிறார். இதற்காக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சோனியா காந்தியுடன் தொலைபேசியில் உரையாற்றுவதற்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நட்சத்திர விடுதியில் இருந்த உத்தவ் தாக்கரேவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். 

எனினும், சோனியா காந்தி சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க விரும்பவில்லை என்பதில் திட்டவட்டமாக இருப்பதாக சரத்பவாருக்கு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. பலமுறை உத்தவ் தாக்கரே அழைத்ததால், மரியாதை கருதியே சோனியா அவருடன் தொலைபேசியில் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனிப்பெரும் கட்சியாக திகழும் பாஜகவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து, ஆளுநரை சந்தித்த பாஜக மாநில தலைமை, பாஜக - சிவசேனா கூட்டணிக்காகவே மக்கள் வாக்களித்துள்ளனர். நாங்கள் தனியாக ஆட்சி அமைக்க முடியாது. சிவசேனா மக்களின் ஆணையை அவமதிக்க விரும்பினால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆதரவுடன் ஆட்சியை அமைக்கட்டும், அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தனர். 

மகாராஷ்டிர தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில்  பாஜக, 105 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா, 56 இடங்களில் வெற்றியடைந்தது. பெரும்பான்மைக்கு 145 இடம் தேவையென்ற நிலையில், பாஜக - சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை வகித்தது. 

எனினும், 50:50 அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சுழற்சி முறையில் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளில் சிவசேனா பிடிவாதமாக இருந்து வந்தது. தேர்தலுக்கு முன்பாகவே அமித்ஷாவுடன் இந்த கூட்டணி ஒப்பந்தங்கள் நடந்து முடிந்ததாக சிவசேனா கூறியது. ஆனால், அது போன்ற எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என ஆரம்பம் முதலே பாஜக உறுதியாக கூறியது. 

.